இந்திய விமானப்படை பொக்ரானில் பகலிரவு பாராமல்  மிகப்பெரிய ஒத்திகை: 140 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பங்கேற்பு

இந்திய விமானப்படை பொக்ரானில் பகலிரவு பாராமல் மிகப்பெரிய ஒத்திகை: 140 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பங்கேற்பு

Published on

பாகிஸ்தான் எல்லைக்கு அருகேயும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் இந்திய விமானப்படை மிகப்பெரிய ஒத்திகையில் ஈடுபட்டது. பகலிரவு பாராமல் ஏராளமான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஏவுகணைகள், குண்டுகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டன.

புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்று ஒத்திகை குறித்து விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கு ராணுவத்துக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இலகு ரக போர் விமானங்கள், தொழில்நுட்ப மேம்பாடு கொண்ட ஹெலிகாப்டர்கள், தரையிலிருந்து ஏவப்பட்டு விண்ணிலுள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட "ஆகாஷ்' ஏவுகணை, விண்ணிலுள்ள இலக்கைத் தாக்கி அழிக்க விண்ணிலிருந்து ஏவப்படும் "அஸ்திரா' ஏவுகணை, சிறிய ராக்கெட்டுகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை இந்த ஒத்திகையின்போது விமானப்படை சோதித்தது.

மேலும், எஸ்யு-30, மிக்-27, எல்சிஏ தேஜாஸ், மிராஜ்-2000, ஹாக் ஆகிய போர்விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in