Last Updated : 24 Feb, 2019 04:41 PM

 

Published : 24 Feb 2019 04:41 PM
Last Updated : 24 Feb 2019 04:41 PM

அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் வீடு மீது தாக்குதல்: வாகனங்களுக்குத் தீவைப்பு, பதற்றமான சூழல் நீடிப்பு

நிரந்தர குடியுரிமை சான்றிதழை 6 சமூகங்களுக்கு வழங்க அருணாச்சல அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலத்தின் பூர்வ குடிமக்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர்.

துணை முதல்வர் சவுனா மெயின் வீடு மீது தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்,  போலீஸ் துணை ஆணையர் அலுவலகத்தை சூறையாடிவிட்டுச் சென்றனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜகவுடன் இணைந்து அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சி ஆட்சியில் இருக்கிறது. அங்கு முதல்வராக பீமா கண்டு உள்ளார். சமீபத்தில் அரசு அமைத்த இணை அதிகார உயர்நிலைக்குழு அளித்த பரிந்துரையின்படி அந்த மாநிலத்தில் பூர்வக் குடிகள் அல்லாத 6 சமூகத்தினருக்கு, நிரந்தர குடியுரிமைச் சான்று வழங்க அருணாச்சலப் பிரதேசம் முடிவு செய்தது. இவர்கள் பல ஆண்டுகளாக அருணாச்சலப் பிரதேசத்தில் வாழ்ந்தபோதிலும் பூர்வ குடிகள் இல்லை.

இது தொடர்பாகக் கடந்த 22-ம் தேதி இரவு அருணாச்சலப் பிரதேச அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், அறிவிப்பு வெளியிட்டதிலிருந்து மாநிலத்தின் பூர்வ குடிமக்கள் போராட்டத்திலும், வன்முறையிலும் இறங்கியுள்ளனர்.

சாலைகளில் கூட்டமாக வலம் வரும் மக்கள் பொதுச்சொத்துக்களையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கித் தீவைத்து பெரும் வன்முறையில் நேற்றில் இருந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் உச்ச கட்டமாக இன்று காலை முதல் போராட்டத்தைப் போராட்டக்காரர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இட்டாநகரில் உள்ள நிதி விஹார் பகுதியில்  துணை முதல்வர் இல்லத்தின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி, தீவைத்து விட்டு தப்பினார்கள்.

 மேலும், இட்டாநகரில் உள்ள போலீஸ்துணை ஆணையர் அலுவலகத்துக்குள் நுழைந்து சூறையாடினார்கள். மேலும், போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்களுக்குத் தீவைத்தனர்.

நகர்லகன் ரயில்நிலையத்துக்குச் செல்லும் சாலையை போராட்டக்காரர்கள் மறித்ததால், ஏராளமான பயணிகள், நோயாளிகள் உரிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் அவதியுற்றனர்.

இதனால், இட்டாநகர், நகர்லாகுன் ஆகிய நகரங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை போலீஸார் பிறப்பித்துள்ளனர். கடந்த இரு நாட்களாக நடந்து வரும் வன்முறையிலும், கல்வீச்சிலும் 24 போலீஸார் உள்ளிட்ட 35 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இன்று காலையில் இட்டாநகர், நகர்லாகுன் பகுதியில் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். வன்முறைச் சம்பவங்கள், வீண் வதந்திகள் பரவாமல் தடுக்க இணையதள சேவையை இட்டநகர், நகர்லாகுன் நகரங்களுக்கு போலீஸார் ரத்து செய்துள்ளனர்.

இதனால், இரு நகரங்களிலும் இருக்கும் மார்கெட்டுகள், பெட்ரோல் நிலையங்கள், கடைகள், வர்த்தக மையங்கள், ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளன.

கடந்த இரு நாட்களில் நடந்த வன்முறையில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைக்கப்பட்டுள்ளன, 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இட்டாநகரில் உள்ள இந்திரா காந்தி பார்க் பகுதியில் சர்வதேச திரைப்பட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், போராட்டக்காரர்களின் வன்முறையால், அந்த திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டது.

மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து முதல்வர் பீமா கண்டுவை தொலைப்பேசியில் அழைத்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அருணாச்சலப் பிரதேச மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x