

சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டைக் கடந்து சுதந்திரமாக தங்கள் குழந்தைகளைப் பார்க்கச் செல்லவும் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்கவும் அனுமதி வழங்கும் வழிமுறை ஒன்றை உருவாக்கக் கோரி முன்னாள் தீவிரவாதிகளின் மனைவிகள் சனிக்கிழமை ஸ்ரீநகரில் போராட்டத்தை நடத்தினர்.
பிரதமர் ஞாயிறு அன்று காஷ்மீர் வருவதற்கு ஒருநாள் முன்னதாக நடத்தப்பட்ட இப்போராட்டம் பிரதமரின் கவனத்தை ஈர்க்கவே என்று கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரிடம் தங்கள் கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் பெருமளவில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளின் மனைவிகள் கலந்துகொண்டனர்.
கணவர்களை பிரிந்திருக்கும் பெண்கள் புடைசூழ வந்தவர்கள் ''எங்களுக்கு நாடு இல்லை'' என்ற முழக்கத்தோடு போராட்டத்தில் இறங்கியதோடு, ''முதல்வேலையாக எங்களுக்கு பயணம் தொடர்பான ஆவணங்களுக்கு வழிசெய்யுங்கள்'' என்ற கோரிக்கையும் முன்வைத்தனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர் தி இந்து(ஆங்கிலம்)விடம் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
கராச்சியைச் சேர்ந்த மெஹ்தாப், இவர் குப்வாராவைச் சேர்ந்த இம்தியாஸ் அகமது வானி என்பவரை திருணம் செய்துகொண்டவர். தற்போது மூன்று குழந்தைகளுக்கு தாய்.
பிரச்சினை என்னவென்றால் இவரும் இவரது குழந்தைகளும், ஒமர் அப்துல்லா அரசு 2010ல் முன்னாள் தீவிரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீருக்கு திரும்பிச் செல்வதற்கான மறுவாழ்வுக் கொள்கை அமல்படுத்தியபோது காஷ்மீரில் சிக்கிக்கொண்டதுதான்.
இது குறித்து மெஹ்தாப் தெரிவிக்கையில்,
''என்னுடைய நிலையை விளக்கமாக எழுதி, என் துயரத்திலிருந்து வெளியே வர உதவும்படி நரேந்திர மோடிக்கும் இம்ரான்கானுக்கும் மனு அனுப்பியுள்ளேன்.
கடந்த 6 ஆண்டுகளாக, பயண ஆவணங்களுக்காக மனு செய்து வருகிறோம். எவ்வாறிருந்த போதினும், எங்களது நாடு எது என்பதுகுறித்து இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது. இங்கே எங்கள் குழந்தைகள் தத்தெடுத்தல் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
நான் என் தாயை இழந்துள்ளேன். பாகிஸ்தானில் எனது தாயின் கல்லறையில் அவருக்காக நான் பிரார்த்தனை செய்ய விரும்புகிறேன்'' என்றார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைநகரமான முஸாஃபராபாத்தைச் சேர்ந்த ஃபோசியா பேகம் பேசுகையில்,
''எங்களுக்கு வயதாகிவிட்டது. என் மூத்த மகள் கல்லூரியில் இளங்கலை படிக்கிறாள். நான் காஷ்மீரைச் சேர்ந்த குலாம் ஹஸன் லோனை திருமணம் செய்துகொண்டேன். ஆனால் நாங்கள் இப்போது பிரிந்துகிடக்கிறோம்.
அவர் சர்வதேச எல்லைக்கு அப்பால் வாழ்கிறார். நானோ இங்கு வாழ்கிறேன். எல்லையைக் கடந்து என் குடும்பத்தைப் பார்த்துவர எனக்கு அடிப்படை உரிமையும் இல்லாத நிலையே இன்றும் உள்ளது. அதுமட்டுமின்றி எங்களுக்கு என்று எந்த ஆவணங்களும் இல்லை'' என்றார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த மணப்பெண் குப்ரா கிலாணி (27), இத்தகைய பிரச்சினையினாலேயே அனந்தநாக்கில் உள்ள தனது கணவரை விவாகரத்து செய்த சம்பவமும் நடந்துள்ளதை தி இந்து (ஆங்கிலம்) முன்பு செய்தியாக வெளியிட்டிருந்தது.