

உத்தரப் பிரதேசத்தில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி இஜாஸ் ஷேக் என்பவரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
டெல்லி ஜும்மா மசூதி குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல தீவிரவாத செயல்களில் ஈடுப்பட்டதாக தேடப்பட்டுவந்த இந்திய முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த தொழிநுட்ப நிபுணரான இஜாஸ் ஷேக் என்பவரை உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் வைத்து டெல்லி போலீஸார் நேற்று இரவு கைது செய்ததாக டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் எஸ்.என். ஸ்ரீவத்சவா கூறினார்.
புனேவை சேர்ந்த இஜாஸ் ஷேக் என்ற தீவிரவாதி, இந்தியன் முஜாகிதீன் அமைப்புக்காக இங்கிருந்து செயல்பட்டு பல நாச வேலைகளை செய்ததாக கூறப்படுகிறது. பல வருடங்களாக இஜாஸ் ஷேக்கை போலீஸார் தேடி வந்தனர்.
இதற்கிடையே கடந்த வாரம் அவர் உத்தரப் பிரதேசத்தில் இருப்பதாக வந்த உளவுத்துறை தகவலை அடுத்து, இஜாஸை பிடிக்க திட்டமிட்டு, நேற்று இரவு சஹாரன்பூரில் கைது செய்தனர்.
இஜாஸ் ஷேக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியன் முஜாகிதீனுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக இந்த வருடம் இந்தியன் முஜாகிதீன் அமைப்பில் செல்வாக்கு பெற்ற சியா உர் ரகுமான் என்பவரை அஜ்மரில் டெல்லி போலீஸார் கைது செய்தனர். பின்னர் கடந்த மார்ச் மாதம், இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் நடவடிக்கைகளை இந்தியாவில் இயக்கி வந்த மோனு என்கிற தேஹ்ஸீன் அக்தர் இந்திய-நேபாள எல்லையில் சிறப்பு படைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இதே போல, கடந்த ஆண்டு இந்திய அரசால் தேடப்பட்ட இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி யாசின் பட்கல் என்கிற அகமது சரார் மற்றும் அவரது முக்கிய கூட்டாளி அசாதுல்லா அக்தர் இந்திய - நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டார்.