Published : 02 Apr 2014 11:56 AM
Last Updated : 02 Apr 2014 11:56 AM

300 எம்.பி-க்களை தாருங்கள்: மோடி வேண்டுகோள்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 300-க்கும் மேற்பட்ட தொகுதி களில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் பரேலி யில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தேர்வு எழுதச் செல்லும் மாணவன் இந்தத் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும் என்று பயபக்தியுடன் இறைவனிடம் வேண்டுவான். அதேபோல் காங் கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலைச் சந்திக்கும்போதும் “ஏழைகள், ஏழைகள், ஏழைகள்” என்று மந்திரம் ஓதுகிறார்கள். இதை நம்பி ஏழைகள் காங்கிரஸை காப் பாற்றுவார்கள் என்று அந்தக் கட்சி கருதுகிறது.

ஆனால் இப்போது ஏழைகள் விழிப்படைந்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் ஆண்டு முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதிதான். அந்தக் கட்சி 365 நாள்களும் மக்களை ஏமாற்றி வருகிறது. காங்கிரஸின் சுய ரூபத்தை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். இனிமேல் அவர்கள் ஏமாற மாட்டார்கள்.

ராகுலுக்கு பசி தெரியுமா?

வறுமை குறித்து ராகுல் காந்தி நிறைய பேசுகிறார். செல்வச் செழிப்பில் பிறந்த அவருக்கு ஏழைகளின் வேதனைகள் எப்படி தெரியும்? பசியின் கொடுமையை அவர் ஒருமுறையாவது உணர்ந் திருப்பாரா?

ஏழைகளைக் காக்கும் கட்சி என்று காங்கிரஸ் மார்தட்டி கூறு கிறது. ஆனால் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பின்பும் அரசு கிடங்குகளில் குவித்து வைக்கப் பட்டிருந்த உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்காமல் அவை கிடங்குகளிலேயே கெட்டு அழிந்தன. பின்னர் அந்த தானியங் களை மதுபான ஆலைகளுக்கு மலிவு விலையில் அரசு அள்ளி வழங்கியது. இதுதான் காங் கிரஸின் உண்மையான சுயரூபம்.

பாஜக கூட்டணியில் அரசியல் கட்சிகள் இணையாது என்று கூறிவருகிறார்கள். அதை பொய்யாக்கும் வகையில் இப் போது எங்கள் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்து வருகின்றன.

காங்கிரஸோ, 3-வது அணியோ, சமாஜ்வாதியோ, பகுஜன் சமாஜ் கட்சியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. ஆனால் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் தங்களது மாயாஜால தந்திரங்கள் மூலம் மக்களை திசை திருப்பி பாஜகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு மக்கள் இடம் அளிக்கக்கூடாது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும், மோடி பிரதமராக வேண்டும் என்பது பிரச்சினை இல்லை. மத்தியில் வலுவான அரசு அமைய வேண்டும்.

அதற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்.

மத்தியில் பெரும்பான்மை அரசு அமைந்தால்தான் பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். உலக அரங்கிலும் இந்தியா தலைநிமிர்ந்து நிற்க முடியும்.

காக்க வைத்த அதிகாரிகள்

இந்தக் கூட்டத்தில் நான் பங்கேற்க காலதாமதமாகிவிட்டது. அதற்கு நான் காரணம் அல்ல. டெல்லி விமான நிலையத்தில் காலை 9.30 மணியில் இருந்து காத்திருக்கிறேன். ஆனால் எனது ஹெலிகாப்டர் பறக்க விமான நிலைய அதிகாரிகள் அனுமதி வழங்காமல் நீண்ட நேரம் காக்க வைத்தனர்.

இருப்பினும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எனக்காக காத்திருந்த மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் நரேந்திர மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x