Published : 12 Feb 2019 05:40 PM
Last Updated : 12 Feb 2019 05:40 PM

அரசு எந்திரங்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றன? -டெல்லி தீ விபத்து விவகாரத்தில் கம்பீர் கடும் சாடல்

டெல்லி கரோல்பாக் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று அதிகாலை நடந்த தீவிபத்தில் 17 பேர் உடல்கருகி பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

 

டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் சிங் தீவிபத்து நடந்த ஹோட்டல் ஆர்பிட் பேலசுக்கு வருகை தந்தார். கட்டிட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க மேஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். “விடுதி நிர்வாகிகள் தரப்பில் கோளாறுகள் இருப்பதாக முதற்கட்டமாகத் தெரிகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற சிங், இப்பகுதியில் உள்ள மற்ற கட்டிடங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

 

அரவிந்த் கேஜ்ரிவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அந்தக் கட்டிடத்துக்கு அருகில் தான் வசிப்பதாகக் கூறி செய்துள்ள ட்வீட்டில், “கட்டிட விதி மீறலில் மனித உயிர்களுடன் விளையாடும் அதிகாரிகளின் கல்நெஞ்சம் என்னை துயருறச் செய்கிறது. இந்த ஹோட்டல் ஜிஜிஎஃப் அலுவலகத்துக்கு வெகு அருகில் உள்ளது. இங்கு எப்படி வணிக நலன்களுக்காக வாகன நிறுத்த விதிகள், கட்டிட விதிமுறைகள் எப்படி வசதியாக மீறப்படுகின்றன என்பது பற்றிய முழு முதல் விவரம் எனக்குத் தெரியும். அருவருப்பாக உள்ளது” என்று ட்வீட் செய்துள்ளார்.

 

அதே போல் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் பற்றி கவுதம் கம்பீர் இன்னொரு ட்வீட்டில், “நிச்சயமாக மனித உயிர் 5 லட்சம் ரூபாய்களை விடப் பெரியதுதான். நம் அரசு எந்திரங்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றன என்பது இதிலிருந்து புரிகிறது. இழப்பீடு என்பது பெருகும் காயத்துக்கு வெறும் பேண்ட் எய்ட் போன்றதுதான்... ஆனால் நமக்குத் தேவை அறுவைசிகிச்சைகள். ஒட்டுமொத்தமாக அமைப்பையே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்” என்று சாடியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x