ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்: சிஆர்பிஎஃப் ஆவேசம்

ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்: சிஆர்பிஎஃப் ஆவேசம்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரில், புல்வாமாவில் தீவிரவாதியின் தாக்குதலுக்கு 45 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதை மறக்க மாட்டோம், பழிக்குப் பழிவாங்குவோம் என்று துணை ராணுவப்படை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

ஜம்முவில் இருந்து சிறீநகருக்கு நேற்று மாலை துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதி பேருந்து மீது காரை மோதச் செய்தார். இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சிகள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளான அமெரிக்கான, ரஷியா, சீனா, இலங்கை, ஐ.நா.அமைப்பு, நேபாளம் ஆகியவை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

தீவிரவாதிகள் மிகப்பெரிய தவறைச் செய்துள்ளார்கள் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு, தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தது. மேலும், பாகிஸ்தானில் உள்ள இந்தியதூதரகத்தின் தூதரையும் இன்றுஇரவு நாடுதிரும்ப மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது.

மேலும் வர்த்தக ரீதியாக பாகிஸ்தானுக்கு நட்புறவு நாடு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்த நிலையில், அந்த அந்தஸ்தை மத்திய அரசு இன்று பறித்துள்ளது.

ஆனால், தங்களுக்கும், இந்த தாக்குதலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப்படையான சிஆர்பிஎஃப் கடும் கண்டனத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

அதில், " புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த நம்முடைய வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம். வீரர்களை இழந்து வாடும் நம்முடைய சகோதரர்களின் குடும்பத்தினருக்குத் துணையிருப்போம். இந்தக் கொடிய தாக்குதலுக்குப் பழிக்கு பழிவாங்குவோம்.

ஒருபோதும் நாங்கள் மறக்கமாட்டோம், ஒருபோதும் மன்னிக்கமாட்டோம். பழிக்குப்பழி வாங்குவோம் " எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in