

இந்திய - சீன எல்லையில் நடந்த தீ விபத்தில் பலியான ராணுவ மேஜரின் மனைவி தனது கணவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில், ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற உள்ளார்.
ராணுவத்துக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள கவுரி பிரசாத் மகதி, சென்னையில் உள்ள ராணுவ அதிகாரி அகாடமியில் விரைவில் பயிற்சி எடுக்க உள்ளார்.
ராணுவ மேஜர் பிரசாத் கணேஷ், இந்திய - சீன எல்லையில் பணியாற்றி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு நடந்த எல்லைப் பகுதியில் நடந்த தீ விபத்தில் பிரசாத் கணேஷ் மரணமடைந்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு மும்பை விரார் பகுதியைச் சேர்ந்த கவுரி பிரசாத்தை திருமணம் செய்தார். பிரசாத் கணேஷ் தான் இறப்பதற்கு முன் தனது மனைவி கவுரி பிரசாத் மகதியிடம் நீயும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கூறிவந்துள்ளார்.
ஆனால், கவுரி பிரசாத் மகதி, வழக்கறிஞராகவும் மற்றும் கம்பெனி செகரட்டரியாகவும் பணியாற்றி வந்ததால், தன்னால் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற இயலாது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தனது கணவர் மறைவுக்குப் பின், கணவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில், ராணுவத்துக்கான ஸ்டாஃப் செலக்சன் போர்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். விரைவில் சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி அகாடமியில் சேர்ந்து 49 வாரங்கள் பயிற்சி எடுக்க உள்ளார்.
முதல் முறை தேர்வு எழுதி தோல்வி அடைந்த கவுரிக்கு 2-வது முறை விதவைக்கான தகுதி அடிப்படையில் பணி கிடைத்துள்ளது. ராணுவத்தில் சேர்வதற்கு முன் அடிப்படை பயிற்சி எடுக்க வேண்டும் என்பதால் விரைவில் சென்னைக்கு வர உள்ளார்.
இது குறித்து கவுரி மகதி நிருபர்களிடம் கூறுகையில், " என்னுடைய தொழில் வழக்கறிஞர், கம்பெனி செகரெட்டரி. தனியார் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் பணியாற்றி வந்தேன். ஆனால், என்னுடைய கணவர் இறந்த பின் அவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ராணுவத்தில் சேர முடிவு செய்தேன்.
ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவது எனது கணவரின் ஆசை. அவருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் ராணுவத்தில் சேர்ந்து அவர் அணிந்த உடையை அணிந்து சேவையாற்ற விரும்புகிறேன். என் கணவர் இறந்த பின் வீட்டில் அமர்ந்து அழுதுகொண்டிருக்க நான் தயாரில்லை. அவருடைய ஆசைப்படி ராணுவத்தில் சேர இருக்கிறேன். இனிமேல் அவர் அணிந்த சீருடைதான் எனக்கும் சீருடை.
இதற்காக ஸ்டாப் செலக் ஷன் போர்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, வரும் ஏப்ரல் மாதம் முதல் சென்னையில் உள்ள ஓடிஏ அகாடமியில் 49 வாரங்கள் பயிற்சி எடுக்க இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.