Published : 18 Feb 2019 05:36 PM
Last Updated : 18 Feb 2019 05:36 PM

என் கருத்தில் உறுதியாக உள்ளேன்; காந்தஹார் சம்பவத்தில் மசூத் அசாரை விடுதலைசெய்தது யார்?- சித்து கேள்வி

பாகிஸ்தான் குறித்த என்னுடைய கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன்; காந்தஹார் சம்பவத்தில் மசூத் அசாரை விடுதலைசெய்தது பாஜகதான் என்று நவ்ஜோத் சிங் சித்து குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானே காரணம் என்று குற்றம் சாட்டிய மத்திய அரசு, தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. உலக நாடுகளும் இந்தத் தாக்குதலைக் கண்டித்தன.

இந்தத் தாக்குதல் குறித்து நேற்று கருத்து தெரிவித்த பஞ்சாப் மாநில அமைச்சரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான நவ்ஜோத் சிங் சித்து, "தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒரு சிலர் செய்யும் இதுபோன்ற செயலுக்காக ஒரு நாட்டையே பழிசுமத்துவதா, ஒரு தனிநபரை பழிசுமத்துவதா" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

நவ்ஜோத் சிங் சித்துவின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. நவ்ஜோத் சிங்கின் கருத்துக்கு நெட்டிசன்கள் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்து, ''நான் என்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். தீவிரவாதத்தை சகித்துக்கொள்ள முடியாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. புல்வாமா தாக்குதலுக்குக் காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் 1999 காந்தஹார் சம்பவத்தில் தீவிரவாதி மசூத் அசாரை விடுதலை செய்தது யார்? (டெல்லியில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் நூற்றுக்கணக்கான பயணிகளோடு கடத்தப்பட்டது. அவர்களை விடுவிக்க வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு மூன்று தீவிரவாதிகளை விடுதலை செய்தது. அதில் ஒரு தீவிரவாதி  மசூத் அசார்)

யார் அதற்குக் காரணம்? அவர்களுக்கு எதிராகத்தான் எங்களின் போராட்டம் இருக்கிறது. எதற்காக ஒரு வீரர் சாகவேண்டும்? ஏன் காஷ்மீர் விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காண முடியவில்லை?'' என்று கேள்வி எழுப்பினார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் சிறந்த நட்பு கொண்டவர். இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்குச் சென்று, அந்நாட்டின் ராணுவத் தளபதியை கட்டியணைத்து சித்து நட்புறவு பாராட்டியது பெரும் சர்ச்சைக்குரியதானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x