என்னிடம் அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள்: தொண்டர்களிடம் பிரியங்கா காந்தி கண்டிப்பு

என்னிடம் அற்புதங்களை  எதிர்பார்க்காதீர்கள்: தொண்டர்களிடம் பிரியங்கா காந்தி கண்டிப்பு
Updated on
1 min read

என்னிடம் அற்புதங்களை எல்லாம் எதிர்பார்க்காதீர்கள், கட்சியின் செயல்பாடு என்பது,  அடிமட்டத் தொண்டர்கள் எவ்வாறு பணி செய்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அமையும் என்று தொண்டர்களிடம் கண்டிப்புடன் பிரியங்கா காந்தி தெரிவித்தார்

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, வரும் மக்களவைத் தேர்தலில்  உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு மண்டலத்துக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உ.பி.யில் தனியாகக் களமிறங்கும் காங்கிரஸ் கட்சியையும், கிழக்கு மண்டலத்துக்குப் பொறுப்பாளராக இருக்கும், பிரியங்கா காந்தியையும் அரசியல் வட்டாரங்கள் மிகப்பெரிய அளவுக்கு எதிர்பார்த்துள்ளன.

உத்தரப் பிரதேசத்தின் பண்டேல்கண்ட் மண்டலத்தில் ஜான்சி, லலித்பூர், ஜலுவான், பண்டா, ஹமிர்பூர் ஆகிய 5 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்களுடன் நேற்று புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பிரியங்கா காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த பண்டேல்கண்ட் மண்டலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளும், 19 சட்டப்பேரவைத் தொகுதிகளும் வருவதால், இங்கு வெற்றி பெற காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டியுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் பிரமுகர்கள் மத்தியில் பிரியங்கா காந்தி பேசுகையில், " என்னிடம் எந்தவிதமான அற்புதங்களையும் எதிர்பார்க்கக் கூடாது. காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது அடிமட்டத் தொண்டர்கள் கையில்தான் இருக்கிறது. அவர்கள்தான் கட்சியை வலுப்படுத்த முடியும். அதைச் செய்வதற்கு எனக்கு உங்களுடைய ஆதரவு தேவை. ஆனால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் யாரேனும் நடந்து கொண்டால், நிச்சயம் கடும் நடவடிக்கை எடுப்பேன். கட்சியில் இருந்தும் நீக்கப்படுவார்கள்" என எச்சரிக்கை விடுத்தார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் பலர் , முன்னாள்  பிரதமர் இந்திரா காந்தியுடன் பேசிய நினைவை ஏற்படுத்துகிறது எனத் தெரிவித்தனர். மேலும், ராணி லட்சுமிபாய் சிலையை பிரியங்கா காந்திக்கு பண்டேல் கண்ட் மண்டல காங்கிரஸ் தொண்டர்கள் பரிசாக அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in