

டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த 2014, ஜனவரி 17-ம் தேதி இரவு, சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கில் அவரது கணவர் சசிதரூர் மீது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 498-ஏ (கணவர் அல்லது அவரது உறவினர்களால் ஒரு பெண் கொடு மைக்கு ஆளாகுதல்), 306 (ஒரு வரை தற்கொலைக்கு தூண்டுதல்) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 306-ன் கீழ் வரும் குற்றம், அமர்வு நீதிபதியின் விசாரணைக்கு உரியது என்பதால் இந்த வழக்கு கடந்த 4-ம் தேதி அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசிதரூர் தரப்பில், பஹ்ரைன் மற்றும் கத்தார் செல்ல அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு டெல்லி காவல்துறை இன்று (பிப். 22) பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். - பிடிஐ