

தேசிய மாதிரி ஆய்வு அலுவலக புள்ளிவிவரங்கள் வேலைவாய்ப்பின்மை கள நிலவரத்தை உறுதி செய்கிறது என பொருளாதார, தொழில்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) கடந்த 2017-18-ம் ஆண்டு வேலையின்மை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வேலையின்மை நிலவரம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த 1972-73-ம் ஆண்டுக்குப்பின் மிகப்பெரிய உயர்வாகும் என ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில், 2017-18-ல் வேலைவாய்ப்பின்மை வரலாறு காணாத அளவு அதிகரித்திருப்பதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி கள நிலவரத்தின் சாட்சி என தொழில்துறை சார் பொருளாதார நிபுணர்கள், வேலை தேடுவோர் மற்றும் வேலையில் இருப்போர் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தேசிய மாதிரி ஆய்வு அலுவலக NSSO புள்ளிவிவரங்களை வெளியிட அரசு மறுப்பது அரசு தரப்பில் வெளிப்படைத்தன்மை இல்லாததற்கான சமீபத்திய அறிகுறி என்றனர்.
நிபுணர்கள் கருத்து:
இதுதொடர்பாக பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நீடித்த வேலைவாய்ப்பு மையத்தின் தலைவர் அமித் பசோல் கூறும்போது, "என்னைப் பொருத்தவரை என்.எஸ்.எஸ்.ஓ புள்ளிவிவரம் ஆச்சர்யம் தருவதைவிட எச்சரிக்கையளிப்பதாகவே தெரிகிறது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் போக்கு கண்கூடாகவே தெரிந்தது.
எங்களது ஆய்வும் இதனை உறுதிப்படுத்தியது. 2011 - 12-ல் இருந்ததைவிட 2015-ல் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. பணமதிப்பு நீக்கம் நிச்சயமாக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நாங்கள் எதிர்பார்த்தோம். அதுவே நிகழ்ந்திருக்கிறது" என்றார்.
புள்ளிவிவரத்தில் குழப்பம்:
அவர் மேலும் கூறும்போது, "அரசாங்கத்தின் ஒரு முடிவு, வேலைவாய்ப்பு புள்ளிவிவரம் தொடர்பாக குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்.எஸ்.எஸ்.ஓ-வின் 5 ஆண்டுகால ஆய்வுகளை வெளிப்படுத்துவதை கைவிடுதல், தொழில்துறை ஆணையத்தின் புள்ளிவிவரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடத் தவறுதல், என்.எஸ்.எஸ்.ஓ.வினை குறித்த கால இடைவெலீயில் தொழிலாளர் சக்தி புள்ளிவிவரங்களை வெளியிடவிடாமல் செய்தல் ஆகியன வேலைவாய்ப்பின்மை புள்ளிவரம் தொடர்பாக பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
நிலவரம் இப்படி இருக அரசாங்கமோ, இபிஎஃப்ஓவின் பே ரோல் புள்ளிவிவரம், முத்ரா கடனுதவி புள்ளிவிவரம் ஆகியனவற்றினை வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளிவிவரங்களாக அளிக்கிறது. இது சிறிதும் பயனற்றது" எனத் தெரிவித்தார்.
இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் இயக்குநரும் தலைமை செயலதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநருமான மகேஷ் வியாஸ் கூறும்போது, "செய்தி ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல், நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதோடு தொழிலாளர் சக்தியும் குறைந்திருப்பதை உணர்த்துகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் தொழிலாளர் சக்தியின் பங்களிப்பு விகிதிம் வெகுவாக குறைந்திருக்கிறது என்பதையும் உறுதி செய்கிறது" எனக் கூறினார்.
இந்த அமைப்பும்கூட தனிப்பட்ட முறையில் வேலைவாய்ப்பின்மை தொடர்பாக மாதிரி ஆய்வுகளை நடத்தி புள்ளிவிவரங்களை சேகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனாமித்ரா ராய் சவுத்ரி என்ற பொருளாதார நிபுணர், "LFPR அதாவது தொழிலாளர் சக்தியின் பங்களிப்பு விகிதம் என்பது வேலை தேடுவோரின் எண்ணிக்கையை தெரிவிப்பதாகும். இது குறைந்து வேலைவாய்ப்பின்மையும் அதிகரிக்கிறது என்றால் நாட்டில் வேலைவாய்ப்பு தொடர்பாக மிகப்பெரிய சிக்கல் நிலவுகிறது என்றே அர்த்தம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை என்.எஸ்.எஸ்.ஓ அறிக்கஒ பற்றி வெளியிட்ட செய்தியில் ஒட்டுமொத்தமாக வேலைவாய்ப்பின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது எனத் தெரிவித்திருக்கிறது. அதுவும் 15 முதல் 29 வயது உடைய இளம் தொழிலாளர்களே வேலைவாய்ப்பின்மையின் தாக்கத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
இளம் தொழிலாளர் சக்திக்கான யுவ ஹல்லா போல் இயக்கத்தின் நிறுவனர் அனுபம் இந்த அறிக்கை தனக்கு எந்த ஆச்சர்யத்தையும் தரவில்லை என்கிறார்.
மாறாக கடந்த இரண்டு ஆண்டுகளில் படித்த இளைஞர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள கோபம் வெளிப்படையாகவே தெரிகிறது எனக் கூறுகிறார்.
"பணமதிப்பு நீக்கத்துக்குப் பின்னர் தொழிலாளர் சக்தியே சுருங்கிவிட்டது. நகர்ப்புற பெண்கள் 27% வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாட்டின் 90% தொழிலாளர் சக்தியைக் கொண்ட அமைப்பு சாரா தொழில் சார் ஊழியர்கள் அவர்களுக்குக் கிடைக்கும் வேலை மற்றும் கூலியில் பெரும் சரிவைக் கண்டுள்ளனர். தினக் கூலிகள் பணமதிப்பு நீக்கத்துக்கு முன்னதாக மாதம் 20 நாட்களாவது வேலை கிடைத்த நிலையில் தற்போது மாதம் வெறும் 10 நாட்களுக்கே வேலை கிடைக்கிறது" எனப் புலம்புவதாக அமைப்பு சாரா ஊழியர்களுக்கான அமைப்பை நடத்தும் சந்திரகுமார் கூறுகிறார்.
இப்படி பல துறை நிபுணர்களும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலக புள்ளிவிவரங்கள் வேலைவாய்ப்பின்மை கள நிலவரத்தை உறுதி செய்கிறது என தங்கள் வாதங்களை முன்வைத்துள்ளனர்.