Published : 01 Feb 2019 12:16 PM
Last Updated : 01 Feb 2019 12:16 PM

ஆங்கிலேயர் சிலையை அடித்து உடைத்த கும்பல்: சுபாஷ் சந்திரபோஸின் சிலையை நிறுவுவதாக அறிவிப்பு

பிஹாரில் ஆங்கிலேயரான ஐந்தாம் எட்வர்டு மன்னரின் சிலையை அடித்து உடைத்த யுவ ஜக்ரான் மஞ்ச் என்னும் இளைஞர் அமைப்பு, சுபாஷ் சந்திரபோஸின் சிலையை நிறுவுவதாக அறிவித்துள்ளது.

 

பிஹாரின் மேற்கு சாம்பரான் மாவட்டத்தில் பேட்டியா என்னும் இடத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. அங்கு ஐந்தாம் எட்வர்டு மன்னரின் ஆறு அடி உயர சிலை உள்ளது.

 

அந்த இடத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த கும்பல், எட்வர்டு மன்னரின் சிலையை உடைத்தது. அதனால் சிலையின் தலையும் கால்களும் சேதமடைந்தன. அப்போது 'பாரத் மாதா கி ஜே', 'வந்தே மாதரம்' ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

இதுகுறித்துப் பேசிய மருத்துவமனையின் தலைவரும் சிலை உடைப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவருமான ரோஹித் சர்மா, ''நம்முடைய அடிமைத்தளையின் கடைசிச் சின்னத்தை அழிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

 

ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவரும் தேர்தல் கணிப்பாளருமான பிரசாந்த் கிஷோரைச் சந்தித்துப் பேசினேன். கட்சியின் மாணவர் பிரிவில் இணைந்துள்ளேன்'' என்றார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மக்களே, மாநிலத்தில் இதேபோன்று அடிமைத் தனத்தின் சின்னங்கள் இருந்தால் தெரிவியுங்கள். அதையும் வந்து நாங்கள் அழிப்போம்.

 

இப்போது உடைக்கப்பட்ட சிலை இருந்த இடத்தில், ராணுவ உடையில் சுபாஷ் சந்திர போஸ் இருக்கும் சிலை நிர்மாணிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

''இதுகுறித்து எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்'' என்று பேட்டியா எஸ்பி ஜெயந்த் காந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x