Published : 21 Feb 2019 11:31 AM
Last Updated : 21 Feb 2019 11:31 AM

தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் பாஜக கூட்டணி வியூகம்: பேச்சுவார்த்தை தீவிரம்

பிஹார், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களை தொடர்ந்து கேரளாவிலும் கூட்டணியை இறுதி செய்ய பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக பல மாநிலங்களில் கூட்டணியை உறுதி செய்து வருகிறது. பிஹாரில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துடனும், மகாராஷ்டிராவில் சிவசேனாவுடனும், தமிழகத்தில் அதிமுகவுடனும் பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளது. இதுமட்டுமின்றி அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

தென் மாநிலங்களில் கேரளாவிலும் பாஜகவுக்கு போதிய வலிமை இல்லாததால் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க பாஜக தலைமை திட்டமிட்டு வருகிறது. கேரளாவில் இடதுசாரிகளும், காங்கிரஸூம் வலிமையாக இருப்பதால் இரு அணிகளுக்கும் மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் கேரளாவில் பாஜக 10 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றபோதிலும், எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. எனினும் திருவனந்தபுரத்தில் பாஜக இடதுசாரி கூட்டணியை முந்தி 2-ம் இடம் பிடித்தது. பாஜக சார்பில் போட்டியிட்ட ஓ.ராஜகோபாலை விடவும், காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் 15 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

இதன் பிறகு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனது தேர்தல் வியூகத்தை மாற்றியது. ஈழவர் சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் உருவாக்கியள்ள பாரத் தர்ம ஜனசேனாவுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக சந்தித்து. 15 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றது. ஓரிடத்தில் மட்டுமே அக்கட்சி வென்றது.

சபரிமலை விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களாகவே அம்மாநிலத்தில் பாஜக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தது. இதனால் தனது ஆதரவு வாக்குகளை பாஜக விரிவுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் சூழ்நிலையில் பாஜக இல்லாததால் அங்கு கூட்டணியுடன் களம் காண முடிவு செய்துள்ளது.

பாரத் தர்ம ஜனசேனாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 6 இடங்களை பாரத் தர்ம ஜனசேனா கோரி வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு முடிவடையும் என தெரிகிறது. அதுபோலவே, தெற்கு கேரளாவில் பாஜக கிறிஸ்தவர்கள் வாக்குகள் அதிகமுள்ள ஓரிரு தொகுதிகளில் கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களை பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த சிலரை சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எர்ணாகுளம், கோட்டயம், மாவெல்லிக்கரா  உள்ளிட்ட்ட தொகுதிகளில் பாஜக ஆதரவுடன் கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போட்டியிடவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இதுமட்டுமின்றி கேரள காங்கிரஸ் கட்சியின் சில குழுக்களையும் பாஜக தலைவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் வெகு விரைவில் கூட்டணியை உறுதி செய்ய கேரள மாநில பாஜகவுக்கு, அக்கட்சித் தலைவர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x