

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பயின்றுவரும் காஷ்மீர் மாநில மாணவர்களுக்கு மிரட்டலும், துன்புறுத்தலும் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் சொந்த மாநிலம் திரும்பி வருகின்றனர்.
ஏற்ககுறைய இதுவரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தாங்கள் பயிலும் இடங்களில் இருந்து வெளியேறி சொந்த மாநிலம் திரும்பியுள்ளனர். பெரும்பாலும் உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து காஷ்மீர் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு நாடுமுழுவதும் பெரும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களில் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அச்சுறுத்தலும், துன்புறுத்தலும் வருவதாக உள்துறை அமைச்சகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் போலீஸாரிடம் மட்டும் கடந்த 2 நாட்களில் 50 பேர் அழைப்புச் செய்து தங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்புறுத்தல்களையும், மிரட்டல்களையும் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தி இந்துவிடம்(ஆங்கிலம்) கூறுகையில், " உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, டேராடூன், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பயிலும் காஷ்மீர் மாநில மாணவர்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் தெரிவித்து, பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுள்ளனர் " எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் 14411 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டால் விரைவாக நிவாரணம் கிடைக்கும், எந்தவகையான மிரட்டல், துன்புறுத்தல் இருந்தாலும் இதில் தொடர்பு கொள்ளலாம் என்று சிஆர்பிஎப் நேற்று இந்த உதவி எண்ணை அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில மாணவர்கள் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் நசிர் குஹேமி கூறுகையில், " கடந்த 3 நாட்களில் நாங்கள் அறிவித்திருந்த உதவி எண்கள் மூலம் 800 அழைப்புகள் காஷ்மீர் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து வந்துள்ளது. பெரும்பாலான அழைப்புகள் டேராடூனில் இருந்து வந்தது.
பஜ்ரங்தள் மற்றும் விஎச்பி அமைப்பைச் சேர்ந்தவர்கள் காஷ்மீர் மாணவர்களுக்கு மிரட்டல், துன்புறுத்தல் செய்து வருகின்றனர். இதையடுத்து போலீஸாரின் உதவியுடன் 100 மாணவர்களை சொந்த மாநிலம் அனுப்பி வைத்தேன். 4 ஆண்டுகளாக டேராடூனில் இருக்கிறேன், இதுபோன்ற சம்பவங்களை அனுபவித்தது இல்லை. வெளிமாநிலத்தவரை இதுபோன்று யாரும் நடத்தியது இல்லை " எனத் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநில சட்டம் ஒழுங்கு போலீஸ் ஏடிஜி அசோக்குமார் கூறுகையில், " டேராடூனில் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள், கல்லூரி விடுதிகளில் போலீஸார் ரோந்து சென்று வருகின்றனர். அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்துக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். அதேசமயம்,தேசத்துக்கு எதிராக குரல் கொடுத்தாலும், உணர்வுகளை வெளிப்படுத்தினாலும் நடவடிக்கை எடுப்போம். இருதரப்பினருக்கும் எச்சரிக்கை விடுத்து அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளோம் " எனத் தெரிவித்தார்.
புதுடெல்லி துணை போலீஸ் கமிஷனர் மதூர் வர்மாவிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், " டெல்லி முழுவதும், குறிப்பாக சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸார் கண்காணிப்பு பலப்படுத்தி இருக்கிறோம். காஷ்மீர் மாநில மக்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதிசெய்வோம் " எனத் தெரிவித்தார்.