Published : 11 Feb 2019 11:24 am

Updated : 11 Feb 2019 11:24 am

 

Published : 11 Feb 2019 11:24 AM
Last Updated : 11 Feb 2019 11:24 AM

ராஜ தர்மத்தைப் பின்பற்றவில்லை; தனிப்பட்ட தாக்குதல் பேச்சைத் தவிருங்கள்: பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

2002-ல் நடந்த குஜராத் கலவரத்திலும் ராஜ தர்மத்தை மோடி பின்பற்றவில்லை, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதிலும் ராஜ தர்மத்தைப் பின்பற்றவில்லை. தனிநபர் தாக்குதலில் ஈடுபடாதீர்கள் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியளித்து இருந்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்பதால், பாஜக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு விலகினார். கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக மத்திய அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களையும், எதிர்ப்பையும் சந்திரபாபு நாயுடு வெளிப்படுத்தி வருகிறார்.


இந்நிலையில் ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் இன்று காலை 8 மணிக்கு ஆந்திரா பவனில் 'தர்ம போரட்ட தீக் ஷா' என்ற பெயரில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், 'ஆட்சியாளர்கள் ராஜ தர்மத்தைப் பின்பற்ற வேண்டும்' என்று கூறுவார். ஆனால், குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரம் குறித்து அவர் கூறும்போது, அங்கு ராஜ தர்மம் பின்பற்றப்படவில்லை என்றார்.

இப்போது குஜராத்தைப் போல, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் ராஜ தர்மம் பின்பற்றப்படவில்லை. எங்களுடைய உண்மையான உரிமைகள் எங்களுக்கு மறுக்கப்படுகின்றன. மத்திய அரசு ஆந்திர மாநிலத்துக்கு அநீதி இழைத்து, தேச ஒற்றுமையைச் சீர்குலைக்கிறது.

5 கோடி மக்கள் சார்பில் மத்தியில் ஆளும் பாஜக அரசை எச்சரிக்கிறேன். ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின்படி உறுதியளித்தவாறு சிறப்பு உரிமைகளை வழங்க வேண்டும் என நினைவுபடுத்துகிறேன்.

அதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதையும் நிறுத்திக்கொள்ளுங்கள் என்று மோடிக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். தனிப்பட்ட முறையில் என் மீதும், என் மக்கள் மீதும் எந்தவிதமான பேச்சும் வேண்டாம். நான் என் மாநிலத்துக்காகப் பணியாற்றி வருகிறேன்.

தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனர் என்.டி.ராமாராவ் நமக்குக் கூறியது என்னவென்றால், யாரேனும் உங்களுடைய சுயமரியாதையைச் சீண்டினால், அவர்களுக்குத் தகுந்த பாடம் கற்பித்துவிடுங்கள். ஆதலால், இனிமேல் நாங்கள் பொறுமை காக்க மாட்டோம. மோடிக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்.

இந்த நாட்டை ஆள்வதற்குத் தகுதியற்ற மனிதர் மோடி. குண்டூருக்குச் சென்று மோடி வெந்த புண்ணில் உப்பைத் தடவிட்டுச் சென்றுள்ளார். டெல்லியில் உண்ணாவிரதம் நடத்துவதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறலாம். ஆனால், நட்புக் கட்சிகளின் துணையுடன் நாங்கள் இலக்கை அடைவோம்.

மாநிலக் கட்சிகள் தங்கள் உரிமைக்காக போராடினால், சிபிஐ அமைப்பை ஏவிவிடுகிறது மத்திய அரசு. நீங்கள் அளித்த வாக்குறுதியின்படி நாங்கள் உங்களிடம் கேட்கிறோம். மன்மோகன் சிங் அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வாக்குறுதி அளித்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக ஆதரித்தது. ஆனால், இப்போதுள்ள நிதியமைச்சர் சாத்தியமில்லை என்கிறார். நாடாளுமன்றப் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டும் எங்களுக்குக் கிடைக்கவில்லை''.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


தவறவிடாதீர்!

    சந்திரபாபு நாயுடுதனிப்பட்ட விமர்சனத்தை தவிருங்கள்ராஜ தர்மம் காக்கப்படவில்லைஆந்திரவுக்கு சிறப்பு அந்தஸ்து

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x