

காஷ்மீர் பள்ளத்தாக்கில் 400-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.
காஷ்மீரில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் 10 மாவட்டங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளன. சுமார் 2500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
ரஜோரி மாவட்டத்தில் வியாழக்கிழமை 63 பேர் சென்ற பேருந்து அடித்துச் செல்லப்பட்டது. சனிக்கிழமை வரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. ரஜோரியின் தானா மாண்டி பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் உயிரிழந்தனர்.
ஜீலம், தவார் உள்ளிட்ட நதிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாயும் நிலையில், பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றும் பணியில் காவல் துறை, ராணுவம், விமானப் படை வீரர்கள் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீர் வெள்ளப் பாதிப்புக்கு 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 7,000 பேரை படையினர் மீட்டுள்ளனர்.
கன மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் சுமார் 400 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
ஸ்ரீநகர், புல்வாமா மற்றும் அனான்டங் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்கள், பள்ளிக் கட்டிடங்கள், மசூதிகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வெள்ள பாதிப்பை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சனிக்கிழமை ஆய்வு செய்தார். 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் காஷ்மீரில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இந்த இக்கட்டான நேரத்தில் காஷ்மீர் அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,100 கோடியை காஷ்மீர் அரசு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், வெள்ளத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.