

புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு காஷ்மீர் இளைஞர்கள் மீது தாக்குதல் நடந்த நிலையில் முதன்முறையாக பிரதமர் மோடி இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீருக்காகத்தான் போராடுகிறோமே தவிர காஷ்மீருக்கு எதிராக அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கல்வி, பணி, மற்றும் வியாபாரம் நிமித்தமாக தங்கி இருக்கும் காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, மிரட்டல் விடுப்பது போன்ற சம்பவங்கள் நடந்தன.
இதனால், காஷ்மீரைச் சேர்ந்த மக்கள், தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இடங்களை விட்டு, மீண்டும் காஷ்மீருக்குத் திரும்பினார்கள். இந்தச் சம்பவம் காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலையும் ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு, 11 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் போலீஸ் டிஜிபிக்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் டோங்க் தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
''தீவிரவாதத்துக்கு எதிராக நாம் போரிட்டு வருகிறோம். மனிதநேயத்துக்கு எதிரானவர்களுடன் தான் நமது போராட்டம். காஷ்மீருக்காகத்தான் போராடுகிறோம். காஷ்மீர் மக்களுக்கு எதிராக அல்ல.
காஷ்மீர் இளைஞர்களுக்கு எதிராக சமீபகாலமாக நடந்து வரும் சம்பவங்கள், சிறிதோ, பெரிதோ அதனை ஏற்க முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள். காஷ்மீரின் ஒவ்வொரு குழந்தையும் இந்தியாவுடன் உள்ளது. நமது போராட்டம் தீவிரவாதத்துக்கு எதிராக மட்டுமே'' என மோடி கூறினார்.