

காஷ்மீரில் பட்காம் மாவட்டத்தில் இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது மற்றும் பாகிஸ்தான் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து 5 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக ஸ்ரீநகர், ஜம்மு, லே, அமிர்தசரஸ், சண்டிகர் ஆகிய விமானநிலையங்கள் மூடப்பட்டு, அங்கு பயணிகள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது
புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது நடத்திய தீவிரவாத தற்கொலைப்படைத் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்த 12 நாட்களுக்குப்பின் நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் பாலகோட் பகுதியில் செயல்பட்டுவந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம்களை தாக்கி இந்திய விமானப்படை அழித்தது.
இதனால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை முதல் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இதற்கு இந்தியத் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் இன்று காலை இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது. மேலும், ராஜவுரி மாவட்டம், நவ்ஷோரா பகுதியில் பாகிஸ்தான் விமானம் அத்து மீறி நுழைந்ததை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
மேலும், இந்திய எல்லைப்பகுதிக்குள் நுழைந்து பாகிஸ்தான் விமானங்கள் குண்டு வீசிவிட்டு வந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
மேலும், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த 2 இந்திய ராணுவ விமானங்களைச் சுட்டுவீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. ஒருவிமானம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும், மற்றொரு விமானம் ஜம்மு காஷ்மீர் பகுதியிலும் சுட்டுவீழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவங்களால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஜம்மு, சிறீநகர், லே, சண்டிகர், அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களை தற்காலிகமாக அரசு மூட உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விமான நிலையங்களில் இருந்து பயணிகள் சேவையும் ரத்து செய்யப்பட்டது.
இந்திய விமான ஆணைய அதிகாரிகள் கூறுகையில், " எல்லையில் அவசரநிலை கருதி, 5 விமானநிலையங்களில் தற்காலிகமாக பயணிகள் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஜம்மு, லே, சிறீநகர், அமிர்தரஸ், சண்டிகர் ஆகிய விமானநிலையங்கள் மூடப்பட்டுள்ளன " எனத் தெரிவித்தார்.
அவசரநிலை காரணமாக விமானநிலையங்கள் மூடப்பட்டுள்ளதே தவிர, எந்தவிதமான அவசர நிலை என்று அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இதேபோல, பாகிஸ்தானில், இஸ்லாமாபாத், லாகூர், மூல்தான், பைசலாபாத், சாய்ல்கோட் ஆகிய நகரங்களில் உள்ள உள்நாட்டு, சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன.