சபரிமலை தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய கேரள அரசு கடும் எதிர்ப்பு

சபரிமலை தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய கேரள அரசு கடும் எதிர்ப்பு
Updated on
2 min read

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப்பெண்களும் செல்லாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கடந்த இரு மாதங்களாக கேரளாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராகத் தேசிய ஐயப்ப பக்தர்கள் அமைப்பு(என்ஏடிஏ) சார்பில் அதன் தலைவர் ஷைலஜா விஜயன்  உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. .

இந்த மனுவை விசாரணை செய்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு ஜனவரி 22-ம் தேதி சீராய்வு மனு மீதான விசாரணை நடக்கும் என்று தெரிவித்தது. ஆனால் வழக்க விசாரிக்கும் அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி இந்து மல்ஹோத்ரா மருத்துவ விடுப்பில் சென்றதால் விசாரணை தொடங்குவது ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 5 நீதிபதிகள் அமர்வு முன்பு சபரிமலை விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது. அப்போது நாயர் சர்வீஸ் சொசைட்டி அமைப்பின் சார்பில் சார்பில் மூத்த வழக்கறிஞர் பராசரன் ஆஜானார். அவர் வாதிடுகையில், ‘‘சபரிமலை ஐயப்பன் கோயிலில் பின்பற்றப்பட்டு வரும் பாம்பரியம் வேறானது.

கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கவில்லை என்ற வாதத்தை இதனுடன் பொருத்தி பார்க்க முடியாது. இந்திய குடிமக்கள் தங்கள் பாரம்பரிய பண்பாட்டை பின்பற்ற அரசியல் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. சபரிமலையில் கடை பிடிக்கும் நடைமுறைகள் பாரம்பரியம் சார்ந்தது, அது தீண்டாமை அல்ல’’ எனக் கூறினார.                                                                           

இந்த வழக்கில் கேரள அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா கூறுகையில் ‘‘சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட எந்த ஒரு மனுவும் தீர்ப்பு அல்லது சட்டத்தின் வரையறை குறித்து குறிப்பிடவில்லை.

அவர்கள் சட்ட பிரிவுகள் எதையும் வரையறுத்து மறுசீராய்வு கோரவில்லை. எனவே இந்த மறு சீராய்வு கோரிக்கைகளை நீதிமன்றம் ஏற்கக்கூடாது’’ எனக் கூறினார்.

தேவசம் போர்டு முன்னாள் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ‘‘பெண்களுக்கு அனுமதி மறுப்பு, ஆண்களுக்கு அனுமதி மறுப்பு என்று கூற முடியாது. அதுபோலவே ஜாதி, மொழி, மதத்தின் பெயராலும் எந்த தடையும் இல்லை. பெண்களில் குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமே தடை விதிக்கப்படுகிறது. இது அந்த கோயிலின் மரபு மட்டுமே. இதில் பெண்கள் உரிமை, தீண்டாமை என்ற வாதம் தேவையற்றது’’ என்றார்.

இதுபோலேவே மறு சீராய்வுக் கோரிக்கை விடுத்த மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாப்டே, ‘‘ஒரு சமூகம் இவு்வாறு தான் வழிபாடு நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட கடவுளை இப்படி தான் வழிபட வேண்டும் எனவும் வலியுறுத்த முடியாது. பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டுவரும் பழக்க வழக்கம் குறித்து இதற்கு முன்பு யாரும் கேள்வி எழுப்பியதில்லை’’ எனக் கூறினார். இதைத்தொடர்ந்து மனு மீதான விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in