Published : 05 Feb 2019 05:27 PM
Last Updated : 05 Feb 2019 05:27 PM

பாஜக - மம்தா அடுத்த மோதல்: ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு: காரில் சென்று ஆதித்யநாத் உரை

மேற்குவங்கத்தில் இன்று நடைபெறும் பாஜக கூட்டத்தில் கலந்து கொள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க மம்தா பானர்ஜி அனுமதி மறுத்து விட்டார். இதையடுத்து காரில் சென்ற யோகி ஆதித்யநாத் அங்கு உரையாற்றி வருகிறார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 200 தேர்தல் பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாகப் பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு  துர்காபூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

மால்டா மாவட்டம், வடக்கு தினாஜ்பூரில் பாஜக பேரணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்க இருந்தநிலையில், அவருடைய ஹெலிகாப்டர் தரையிறங்க, முன்அறிவிப்பும் இன்றி திடீரென மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துவிட்டது.

இதனால், உ.பி. முதல்வர் வருகை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, காணொலிக் காட்சி மூலம் ஆதித்யநாத் பேரணியில் உரையாற்றினார். இந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் புருலியாவில் இன்று நடக்கும் பாஜக கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பங்கேற்க உள்ளார்.

அவரது ஹெலிகாப்டர் புருலியாவில் தரையிறங்க மேற்குவங்க அரசு மீண்டும் அனுமதி மறுத்து விட்டது. எனவே, ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ  வரை ஹெலிகாப்டரில் சென்று, அங்கிருந்து காரில் புருலியா செல்கிறார் ஆதித்யநாத்.

முன்னதாக, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத் ‘‘பழிவாங்கல், வன்முறை, ஊழலில் ஈடுபடும் மம்தா பானர்ஜி பாஜகவை பார்த்து பயப்படுவது இயல்பு தான். இதுபோன்ற நடவடிக்கைகளால் மேற்குவங்கத்தில் பாஜக வளருவதை அவரால் தடுக்க முடியாது’’ எனக் கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி ‘‘ஆதித்யநாத்தை உத்தர பிரதேச நிர்வாகத்தை கவனிக்க பாஜக தலைமை கூற வேண்டும். அவர் மாநிலத்தை நிர்வகித்து விட்டு மேற்குவங்கத்துக்கு வரட்டும்’’ எனக் கூறினார்.

இதனிடையே காரில் மேற்குவங்கம் சென்ற யோகி ஆதித்யநாத் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x