

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டுவரும் இந்தியாவின் முதல் அதிவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொழில்நுட்ப கோளாறுகளினால் பாதிக்கபட்டதை கிண்டல் செய்யும் அரசியல்வாதிகள், பொதுமக்கள் ஆகியோர் மீது பிரதமர் மோடி தன் கோபாவேசத்தைக் கொட்டியுள்ளார்.
தன் சொந்தத் தொகுதியான வாரணாசியில் ரூ.3,300 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, வந்தேபாரத் விரைவு ரயிலைக் கொச்சைப் படுத்துபவர்கள் நூற்றுக்கணக்கான தொழில்பூர்வ பணியாளர்களை இழிவுபடுத்துகின்றனர், என்றும் பொறியியலாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் ஓய்வு ஒழிச்சலில்லாமல் பணியாற்றிய திட்டமாகும் இது, அவர்களை மன்னிக்க முடியவில்லையா என்று பிரதமர் மோடி சாடினார்.
“எதிர்மறை மனநிலை கொண்ட மக்கள் இந்த அதிவிரைவு ரயில் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் கடின உழைப்பை கேலி பேசுவது வருத்தத்தை அளிக்கிறது., இவர்களுக்கு எதிராக சரியான இடத்தில், சரியான நேரத்தில் உங்கள் கோபங்களைக் காட்டுங்கள். புதிய இந்தியாவைக் கட்டமைக்க அனைவரும் உழைத்து வரும் நிலையில் இம்மாதிரியான கேலிகள் நியாயமற்றது.
சென்னை ரயில் கோச் தொழிற்சாலையின் பொறியியாளர்கள், தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு என் வாழ்த்துக்கள், இம்மாதிரியான மக்களின் கடின உழைப்பினால்தான் ரயில்வே துறையில் சிலபல வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. இருப்புப்பாதைகள் இரட்டிப்பாகியுள்ளன, மின்மயமாக்கம் நடைபெறுகிறது, இரட்டை வழிப்பாதை அதிகரித்துள்ளது.
இப்படிப்பட்ட உழைப்பாளிகள்தான் நாளை இந்தியாவின் புல்லட் ரயிலையும் வெற்றிகரமாக்குவார்கள்.
இவ்வாறு கூறியுள்ளார் பிரதமர் மோடி.