ஆட்டோ சுந்தர்: 17 ஆண்டுகளில் 1100 இலவச சவாரி; தந்தை வழியில் செல்லும் தனயன்

ஆட்டோ சுந்தர்: 17 ஆண்டுகளில் 1100 இலவச சவாரி; தந்தை வழியில் செல்லும் தனயன்
Updated on
1 min read

பிரசவத்துக்கு இலவசம். என்ற வாக்கியத்தை கொள்கையாகவே கடைபிடிக்கும் ஆட்டோக்காரர் இவர். இவரது பெயர் சுந்தர். எல்லோராலும் அறியப்பட்ட பெயர் ஆட்டோ சுந்தர் அறியப்பட்டவர். வயது 42. 17 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் இவர் இதுவரை 1110 கர்ப்பிணிகளை பிரசவத்துக்காக இலவசமாக மருத்துவமனைகளுக்கு ஏற்றிச் சென்றிருக்கிறார்.

பிள்ளைகளுக்கு எப்போதுமே பெற்றோர்தான் கண்முன் தெரியும் முன்மாதிரிகள். அதனாலேயே பெரும்பாலான பிள்ளைகள் அப்பா படித்த படிப்பையோ அம்மா பார்த்தா வேலையையோ விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.

அப்படித்தான் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுந்தரும் ஆட்டோ ஓட்டுநராகியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தனது தந்தையைப் போலவே பிரசவத்துக்கு இலவசமாக ஆட்டோ இயக்குகிறார்.

உல்லுரி சுந்தர் (42) இது குறித்து கூறும்போது, "அப்பாவைப் பார்த்துதான் நான் ஆட்டோ ஓட்டினேன். அப்பாவைப் பார்த்துதான் பிரசவத்துக்கு கர்ப்பிணிகளை இலவசமாக அழைத்துச் செல்கிறேன்.

அப்பா பெயர் உல்லுரி பிரகாஷ். அப்பா 35 ஆண்டுகள் ஆட்டோ ஓட்டினார். சம்பாதிக்கும் பணம் கைக்கும் வாய்க்கும் சரியாக இருந்தபோதும் கூட பிரசவத்துக்கு கர்ப்பிணிகளை ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் செல்வார். இதுவரை அப்பா 5000 கர்ப்பிணிகளையாவது இலவசமாக பிரசவத்துக்கு அழைத்துச் சென்றிருப்பார்.

அப்பாவைப் பார்த்தே நானும் இதை கடைபிடிக்க ஆரம்பித்தேன். 17 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறேன். இதுவரை 1100 கர்ப்பிணிகளை பிரசவத்துக்கு இலவசமாக அழைத்துச் சென்றிருப்பேன்.

எனது ஆட்டோவின் பின்னால் எனது செல்ஃபோன் எண்ணை எழுதிவைத்திருக்கிறேன். ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கே எனது உதவி. அவர்கள் எப்போது எனது எண்ணை தொடர்பு கொண்டாலும் உடனே அங்கு சென்று உதவிக்கு நிற்பேன்" என்றார்.

இதுதவிர கணகமகாலட்சுமி, நூகாலம்மா கோயில் திருவிழாக்களின் போது இலவச சவாரி செல்வதையும் இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in