

சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கில் சாட்சியங்கள் அழிக்கப்பட்டது தொடர்பாக மேற்குவங்க போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாரிடம் ஷில்லாங்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ரோஸ் சிட்பண்ட்ஸ், சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்குகளை விசாரித்து வந்த மேற்குவங்க போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார், முறையாக விசாரிக்கவில்லை என வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டன. விசாரணை ஆவணங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்தப் பலமுறை சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை. தற்போது கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனராக ராஜீவ் குமார் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ராஜீவ் குமார் இல்லத்துக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த முயன்றனர். ஆனால், வீட்டு வாயிலில் பாதுகாப்பில் இருந்த கொல்கத்தா போலீஸாருக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆவணங்கள் இல்லாமல் வந்திருப்பதாகக் கூறி சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தவிட்ட கொல்கத்தா போலீஸார், அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர். சிபிஐ நடவடிக்கையை கண்டித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கை விசாரித்துவரும் சிபிஐ முன் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் நேரில் ஆஜராகி, விசாரணைக்கு நம்பகத்தன்மையான முறையில் ஒத்துழைக்க வேண்டும், இந்த விசாரணை நடுநிலையான இடமான மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் நகரில் நடக்க வேண்டும், சிபிஐ கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது.
இதையடுத்து காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் ஷில்லாங் சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவருடன் மாநில போலீஸ் அதிகாரிகள் 3 பேர் வந்தனர். இதேபோல் சிபிஐ தரப்பில் கமிஷனரிடம் விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து 10 அதிகாரிகளும் ஏற்கெனவே ஷில்லாங் வந்தனர்.
சாரதா நிறுவன மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டது தொடர்பாக, அதிகாரிகள் விசாரித்தனர்.