Published : 07 Feb 2019 04:58 PM
Last Updated : 07 Feb 2019 04:58 PM

நிதின் கட்கரிக்கு சோனியா காந்தியும் பாராட்டு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பணிகளை, நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி உட்பட காங்கிரஸ் எம்.பி.க்களும் மேஜையை தட்டி பாராட்டி வரவேற்றனர்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, தொண்டர்கள் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், “குடும்பத்தை நிர்வகிக்க முடியாத ஒருவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது” என்றார். இது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கூறப்பட்டதாக சில தரப்பினரால் கருதப்படுகிறது.

இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “கட்கரிஜி வாழ்த்துகள். பாஜகவில் கொஞ்சம் துணிச்சல் உள்ளவர் நீங்கள் மட்டும்தான். ரஃபேல் ஊழல் மற்றும் அனில் அம்பானி விவகாரம், விவசாயிகளின் துயரம், சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் சீரழிவு ஆகியவை குறித்தும் நீங்கள் பேசவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த நிதின் கட்கரி உங்கள் நற்சான்றிதழ் எனக்கு தேவையில்லை என ராகுல் காந்திக்கு பதிலளித்தார். இந்த நிலையில், ராகுல் காந்தியை தொடர்ந்து அவரது தாயும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தியும் நிதின் கட்கரியை பாராட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின்போது, நெடுஞ்சாலைத்துறை தொடர்பான கேள்விக்கு நிதின் கட்கரி பதிலளித்தார். அப்போது தனது துறை செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்ட அவர் எம்.பி.க்கள் அனைவரும் இதனை பாராட்ட வேண்டும் என கோரினார்.

அப்போது பாஜக எம்.பி.க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது பாஜக எம்.பி கணேஷ் சிங், நிதின் கட்கரியை எதிர்க்கட்சிகளும் பாராட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மேஜையை தட்டி இதனை வரவேற்றார். இதை பார்த்த காங்கிரஸ் எம்.பி.க்களும் உடனடியாக மேஜையை தட்டி நிதின் கட்கரிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x