Last Updated : 01 Feb, 2019 08:52 AM

 

Published : 01 Feb 2019 08:52 AM
Last Updated : 01 Feb 2019 08:52 AM

ராமர் கோயிலுக்கு பிப்ரவரி 21-ல் அடிக்கல் நாட்டப்படும்; துவாரகா பீடம் மற்றும் பத்ரிநாத் ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் அறிவிப்பு

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட பிப்ரவரி 21-ல் அடிக்கல் நாட்டப்படும் என பிரயாக்ராஜின் அர்த் கும்பமேளாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி.யின் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் அர்த் கும்பமேளா விழாவிற்காக நாடு முழுவதிலும் இருந்து சாதுக்களும், மடாதிபதிகளும் அங்கு முகாமிட்டுள்ளனர். இங்கு முக்கிய சாதுக்கள் மற்றும் மடாதிபதிகளின் ‘பரம தர்ம சபை’ (பரம் தரம் சன்சத்) கூட்டம் கடந்த 28-ல் துவங்கி மூன்று நாள் நடைபெற்றது. சாதுக்களின் உயரியக் கூட்டமாகக் கருதப்படும் இக்கூட்டத்தில் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். குஜராத்தின் துவாரகா பீடம் மற்றும் பத்ரிநாத் ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியாரான சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்திற்கு பின் சங்கராச்சாரியர்களில் மூத்தவரான ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறும்போது, ‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதன் பெயரில் விஎச்பி செய்து வரும் செயல் அமைதியை போதிக்கும் இந்து தர்மத்திற்கு எதிரானது. அயோத்தியில் ராமர் வீற்றிருக்கும் இடத்தில் நாங்கள் இந்து தர்மங்களின்படி கோயில் கட்ட பிப்ரவரி 21-ல் அடிக்கல் நாட்டஉள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், அயோத்தியில் கையகப்படுத்தப்பட்டசர்ச்சைக்குட்படாத நிலத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை கண்டித்தும் தீர்மானம் இடப்பட்டது. இதற்குமுன், ராமர் கோயிலுக்கான முதற்கட்ட ஆலோசனை, கடந்த வருடம் நவம்பர்25 முதல் 27 வரை வாரணாசியின் ‘பரம் தரம் சன்சத்’ கூட்டத்தில் நடைபெற்றது. அதே தினத்தில்விஎச்பி சார்பில் அயோத்தியிலும் சாதுக்கள் கூட்டமும் ராமர் கோயிலுக்காக நடைபெற்றிருந்தது.

எனவே, பிரயாக்ராஜின் பரம் தரம் சன்சத், விஎச்பிக்கு எதிரானக் கூட்டமாகக் கருதப்படுகிறது. வரும் பிப்ரவரி 10 வரை நடைபெறும் அர்த் கும்பமேளாவிற்கு பின் பிரயாக்ராஜில் துவங்கி சாதுக்கள் அயோத்தி அடைவதாகவும், அங்கு பிப்ரவரி 21-ல் அடிக்கல் நாட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதுஇது குறித்து சங்காராச்சாரியர் ஸ்வரூபானந்த் மேலும் கூறுகையில், ‘‘அயோத்தியில் ஒன்றாக ஐந்து பேர் கூட 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, நால்வர்களாக செங்கல்களுடன் அங்கு போய் சேரும்படிசாதுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டுதல் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல. தனது வாழ்நாளில் பாபர் ஒருமுறை கூட அயோத்திக்கு செல்லவில்லை. அவர் பெயரில் தன் தோழமைக் கட்சியான பாஜகவின் அரசியல் லாபத்திற்காக விஎச்பி சர்ச்சையாக்குகிறது’’ எனத் தெரிவித்தார். சுவாமி ஸ்வரூபானந்த், கடந்த 1942-ல்ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற ’வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர் என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x