

சுமார் நாற்பது தற்கொலைப் படையினரால் இருசக்கர வாகனங்களிலும் தீவிரவாதத் தாக்குதல் இந்தியாவில் நடத்த ஜெய்ஷ்-எ-முகம்மது திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய உளவுத்துறை அளித்து எச்சரித்துள்ளது.
நேற்று முன்தினம் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நான்கு சக்கர எஸ்யூவி வாகனத்தால் ராணுவத்தினர் மீது இடித்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிமருந்துகள் நிரப்பி அதில் தற்கொலை படைத் தாக்குதல் நடத்தியவர் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-எ-முகம்மது அமைப்பைச் சேர்ந்த ஆதில் முகம்மது தார் ஆவார்.
பிளஸ் 2 வரையில் படித்த காஷ்மீர் இளைஞரான ஆதிலிடம் பேசி மனமாற்றம் செய்ததில் அப்துல் ராஷீதுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த ராஷீத் ஜெய்ஷ்-எ-முகம்மது படையின் தலைமை கமாண்டோவாக இருப்பவர்.
பயங்கரவாதியான இந்த அப்துல் ராஷீத், ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றவர். இவர் தான் புல்வாமா தாக்குதலின் மூளையாக செயல்பட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை கருதுகிறது.
இந்தத் தாக்குதல் மீதான மத்திய உளவுத்துறையின் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி சுமார் 40 தற்கொலைப் படையினர் இருசக்கர வாகனங்களில் வெடிபொருட்களுடன் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ''இப்பணிக்காக காஷ்மீரின் தென் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களிடம் தீவிரவாத இயக்கமாக ஜெய்ஷ்-எ-முகம்மதின் முகம்மது ராஷீத் பேசி வருகிறார். இதனால் தான் காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் நேற்று முதல் அணிவகுத்துச் செல்ல நேற்று தடை செய்யப்பட்டிருந்தது'' எனத் தெரிவித்தனர்.
இந்த தகவலை அடுத்து ஜம்மு-காஷ்மீரின் ராணுவத்தினர் அதிக கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்து அம்மாநிலப் போலீஸாரின் நேரடித் தொடர்பில் இருக்கும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மீதான புதிய வழிமுறைகள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராணுவக் குழுக்கள் அனைவருக்கும் நேற்று அனுப்பப்பட்டுள்ளது. எதிர்பாராமல் நிகழும் புதுவிதமான சம்பவங்கள் பற்றி அனைவருக்கும் உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி 8-ல் எச்சரிக்கை
இதனிடையே, கடந்த பிப்ரவரி 8-ல் ஜம்மு-காஷ்மீர் ராணுவத்தினருக்கு ஒரு முக்கிய அறிவிப்பை உளவுத்துறை அளித்தது. இதில் ராணுவத்தின் குழுக்கள் வேறு இடங்களுக்கு மாறும் முன்பாக அப்பகுதியை முழுமையாக சோதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
கண்ணிவெடிகள் அபாயம்
இதற்கு அங்குள்ள நிலப்பகுதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது காரணம் ஆகும். தற்போது ஆள் நடமாட்டங்கள் குறைந்த பகுதிகளில் ராணுவ வாகனங்கள் தனியாக செல்லவும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.