பண மதிப்பிழப்புக்குப் பின் வேலையின்மை விவரங்கள் அரசிடம் இல்லை: மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் அறிவிப்பு

பண மதிப்பிழப்புக்குப் பின் வேலையின்மை விவரங்கள் அரசிடம் இல்லை: மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் அறிவிப்பு
Updated on
1 min read

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தின் புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கெங்வார் மக்களவையில் அறிவித்தார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டில் நிலவிய வேலையின்மை குறித்த புள்ளிவிவரங்கள் என்ன என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மக்களவையில் நேற்று எழுத்துபூர்வமாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கெங்வார் பதில் அளித்தார்.

அவர் கூறுகையில், " தற்போது வரை நாட்டில் வேலையின்மை குறித்த புள்ளிவிவரங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு மட்டுமே அரசிடம் இருக்கின்றன. அதன்படி, கடந்த 2015-16-ம் ஆண்டு நிலவரப்படி நாட்டில் வேலையின்மை 3.7 சதவீதமாக இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பின் நாட்டில் வேலையின்மை குறித்த புள்ளிவிவரங்கள் ஏதும் அரசிடம் இல்லை. தொழிலாளர் நலத் துறையிடமும் இல்லை " எனத் தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு அமைச்சர் சந்தோஷ் கெங்வார் பதில் அளிக்கையில், "பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் அமைப்புசாரா தொழில்களில் எவ்வாறு இருந்தது என்பது குறித்த தகவல்கள் பராமரிக்கப்படவில்லை.

மத்திய புள்ளியியல் துறை அமைச்சகத்தின் நடத்தும் ஆய்வுகளின் நோக்கம் என்பது, தொழிலாளர் துறையில் காலாண்டுக்கு ஒருமுறை நடக்கும் மாற்றங்கள், தொழிலாளர்கள் குறித்த விகிதம், வேலையின்மை ஆகியவற்றைக் கணக்கிடுவதுதான். மேலும் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் இருக்கும் வேலையின்மை குறித்தும் கணக்கெடுக்கும். ஆனால், அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது புள்ளியியல்துறையின் செயலாளர் டி.சி.ஏ.ஆனந்த் அந்த அறிக்கையை ஆய்வு செய்து வருவதால், இன்னும் வெளியிடப்படவில்லை " எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in