

பிரதமர் நரேந்திர மோடியை விட சிறந்த நடிகர் யாருமில்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு துப்புரவுத் தொழிலாளர்கள் பாதங்களை சுத்தம் செய்து பூஜை செய்தார். இது பரவலாக பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
"தேர்தல் வருவதாலேயே பிரதமர் மோடி துப்புரவுத் தொழிலாளர்களின் பாதங்களைக் கழுவி பூஜை செய்தார். கடந்த 4 ஆண்டு காலமாகவும் அவர்கள் துப்புரவு பணியாளர்களாகத்தான் இருந்தனர். அப்போதெல்லாம் அவர்கள் கால்களை மோடி கழுவவில்லையே? இப்போது தேர்தல் வரவிருப்பதால் அவர்களுக்குப் அவர் பாதை பூஜை செய்கிறார்.
பிரதமர் மோடிக்கு யாராவது வணக்கம் சொன்னால் அவர் எப்போதும் திரும்பச் சொல்வதில்லை. அத்வானியைக்கூட இப்படித்தான் அவமதித்தார். மோடியைவிட சிறந்த நடிகர் யாருமில்லை" என விமர்சித்துள்ளார்.
துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாதபூஜை செய்த மோடி, துப்புரவு தொழிலாளர்கள்தான் உண்மையான கர்ம யோகிகள் என்று புகழ்ந்து பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஊழலை ஆதரிக்கும் மோடி
செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமாகப் பேசிய சந்திரபாபு நாயுடு தொடர்ந்து ஆங்கோல் நகரில் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, "மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது நாங்கள் அவரது நடவடிக்கைகளை விமர்சித்தோம். பின்னர் அவர் திருந்தியதாக நம்பி அவரோடு கூட்டணி அமைத்தோம். ஆனால், 4 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட அவர் திருந்தாத நிலையில் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகினோம்.
மோடி ஊழலுக்குத் துணை நிற்கிறார். வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு நாட்டிலிருந்து தப்பியோடியவர்களே இதற்கு சாட்சி. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீது 11 வழக்குகள் உள்ளன. ஆனால், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இப்படி ஊழல்வாதிகளை ஆதரித்துக்கொண்டு ஊழல் ஒழிப்பைப் பற்றி எப்படி பேசுகிறார்கள்?
மோடி மத்தியில் எல்லாத் துறைகளிலும் தோற்றுவிட்டார். அனைத்து சுயாட்சி அமைப்புகளை சீரழித்துவிட்டார். அமலாக்கத்துறையையும் ஐடி துறையையும் தவறாகப் பயன்படுத்துகிறார். விவசாயிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். தேசமே பாஜகவை எதிர்க்கிறது" என சந்திரபாபு நாயுடு விமர்சித்தார்.