Published : 14 Feb 2019 10:14 AM
Last Updated : 14 Feb 2019 10:14 AM

வடகிழக்கு மாநில மக்கள் மகிழ்ச்சி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தோல்வியால் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதால், வடகிழக்கு மாநில மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினார்கள்.

வடகிழக்கு மாநில மக்கள், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்தியஅரசு கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் தாக்கல் செய்யாமல் தோல்வி அடைந்தது. இதனால் வரும் ஜூன் 3-ம் தேதியோடு காலாவதியாகிவிடும் என்ற செய்தியை அறிந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாத மக்களுக்குக் குடியுரிமை வழங்கும் திட்டமே குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவாகும். இதற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

வடகிழக்கு மாநிலங்களில் பாஜக கூட்டணியுடன் ஆட்சியில் இருந்த மேகாலயா முதல்வர் கான்ராட் கே.சங்மா குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

மேகாலயா மாநிலத்தில் பாஜகவுடன் இணைந்து சங்கமாவின் தேசிய மக்கள் கட்சி ஆட்சியில் இருந்தாலும், பாஜக அரசு கொண்டுவந்த இந்த அரசுக்கு மாநிலமே கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் உள்ள மக்களும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்படவில்லை, தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது என்ற செய்தி வெளியானதும், அசாம், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள் தங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதி உற்சாகமடைந்தனர். இனிப்புகளைப் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அனைத்து இந்திய அசாம் மாணவர்கள் அமைப்பின் தலைமை ஆலோசகர் சமுஜல் கே.பட்டாச்சார்யா கூறுகையில், "வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் இந்த மசோதாவுக்கு எதிராக இருந்தது. ஜனநாயகத்தைக் காக்கவும், பன்முகத்தன்மையைக் காக்கவும் இந்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்த உடனே போராட்டத்தில் இறங்கினார்கள்" எனத் தெரிவித்தார்.

அசாம் மாநிலத்தில் முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவு அளித்துவந்த அசாம் கன பரிசத் கட்சி இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவை விலக்கிக் கொண்டது.

இப்போது இந்த மசோதா தாக்கல் செய்யப்படாமல் வரும் ஜூன் மாதம் காலாவதியாகும் என்பதால், மீண்டும் பாஜகவுடன் கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசிக்கப்படும் என அசாம் கன பரிசத் கட்சி தெரிவித்துள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தோல்வி அடைந்தது மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என அசாம் மாநில காங்கிஸ் கட்சி தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் தருண் கோகய் கூறுகையில், "பாஜக தலைவர் சர்பானந்தா சோனாவால், நிதி அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் இந்த மாநிலத்தை அழிக்க இந்த மசோதாவைக் கொண்டுவந்தாலும் மக்கள் முறியடித்துவிட்டனர்" எனத் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றாமல் இருந்தமைக்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x