ராகுல் காந்தியின் தலையீட்டால்தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினேன்: எஸ்.எம். கிருஷ்ணா பரபரப்பு பேச்சு

ராகுல் காந்தியின் தலையீட்டால்தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினேன்: எஸ்.எம். கிருஷ்ணா பரபரப்பு பேச்சு
Updated on
2 min read

46 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த நான், ராகுல் காந்தியின் தலையீட்டால்தான்அங்கிருந்து வெளியேறினேன் என்று முன்னாள் ஆளுநரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போது பாஜகவில் இருப்பவருமான எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா, 46 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியவர். மாநில ஆளுநராக, மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட மோதலால், கடந்த 2017-ம் ஆண்டு கட்சியில் இருந்து வெளியேறி, பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், மடூர் கிருஷ்ணா பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் எஸ்.எம். கிருஷ்ணா பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தும், மன்மோகன் சிங் அரசில் இருந்து வெளியேறியதற்கும் ராகுல் காந்தியின் தலையீடுதான் முக்கியக் காரணம். ஆட்சியிலும், கட்சியிலும் ராகுல் காந்தியின் தலையீடு பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் இல்லை.ஆனாலும், கட்சியிலும், ஆட்சியிலும் ஏராளமான விஷயங்களில் தலையிட்டார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவருக்குத் தெரியாமல், அவரின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் பல முக்கிய முடிவுகளை ராகுல் காந்தி எடுத்தார்.

2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், காமென்வெல்த் ஊழல் போன்றவை நடந்ததால் தனது கூட்டணியில் உள்ள கட்சிகளை கட்டுப்படுத்த முடியாத சூழலுக்கு காங்கிரஸ் தலைமை தள்ளப்பட்டது. அந்தச் சமயத்தில், தலைமைப் பதவிக்கு யாரும் தகுதியானவர்களாக இல்லை.

அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தனது அமைச்சரவையையும், அரசையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லாதவராக இருந்தார். மாறாக, ராகுல் காந்தி அரசுக்கு இணையாகத் தனியாக ஒரு அமைச்சரவையை ஏற்படுத்திச் செயல்பட்டு வந்தார்.

நான் கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியில் வகித்த பல்வேறு பதவிகளிலும் எனது பணியை ராகுல் காந்தி உத்தரவின் பெயரில் திறமையாகவே செய்தேன். ஆனால், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆட்சிப் பதவியில் இருக்கக் கூடாது என்று ரகசியமாக ராகுல் காந்தி உத்தரவிட்டதால், நான் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்.

2009 முதல் 2014-ம் ஆண்டுவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நானும் பதவியில் இருந்தேன் என்பதால், அப்போது நடந்த நல்ல விஷயங்களுக்கும், தவறுகளுக்கும் நானும் பொறுப்புதான்.

ஆனால், தற்போது பிரதமர் மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது''.

இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in