Published : 21 Feb 2019 05:17 PM
Last Updated : 21 Feb 2019 05:17 PM

புல்வாமா தியாகிகளின் குடும்பங்களுக்கு ரூ.6.7 கோடி: அமெரிக்காவில் இருந்து தனியொருவராகத் திரட்டிய இந்திய இளைஞர்

புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ அமெரிக்காவில் இருந்து தனியொருவனாக ரூ.6.7 கோடியை  இந்திய இளைஞர் விவேக் படேல் திரட்டியுள்ளார்.

 

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த பிப்.14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

 

இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகள், விளையாட்டு வீரர்களும் வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

 

பிஹார் ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், பிஹார் வீரரின் மகளைத் தத்தெடுத்துள்ளார். இந்திய அரசின் சார்பில் 'பாரத் கே வீர்' இணையதளம் மூலம் பணம் திரட்டப்பட்டு வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் குஜராத்தைச் சேர்ந்த 26 வயது இந்திய இளைஞர் விவேக் படேல், அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் வசித்து வருகிறார். அவர் அங்கிருந்தே, 'பாரத் கே வீர்' மூலம் வீரர்களுக்கு உதவ முயற்சித்தார்.

 

ஆனால் சர்வதேச டெபிட் / கிரெடிட் மூலம் இந்திய இணையதளத்தில் பணம் செலுத்தமுடியவில்லை. இதனால் அங்குள்ளவர்களிடையே நிதி திரட்டி, இந்தியாவுக்கு வழங்க முடிவெடுத்தார்.

 

5 லட்சம் டாலர்கள் என்ற இலக்குடன் நண்பர்கள், அக்கம் பக்கத்தினரை அணுகினார். ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். ஏழே நாட்களில் வங்கிக் கணக்கில் 9.23 லட்சம் டாலர்கள் (ரூ.6.7 கோடி) குவிந்தது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் சுமார் 23 ஆயிரம் பேர் விவேக் படேலிடம் நிதி அளித்தனர். இவரின் முயற்சிக்கு ஃபேஸ்புக் தனது ஆதரவை அளித்துள்ளது. இத்தொகை முழுவதும் முறையாக வீரர்களின் குடும்பத்திடம் சேர்க்கப்பட்டு, அதற்கான அப்டேட் வழங்கப்படும் என்று விவேக் படேல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x