Published : 25 Feb 2019 03:32 PM
Last Updated : 25 Feb 2019 03:32 PM

உ.பி.யை தொடர்ந்து உத்தரகண்ட், ம.பி.யிலும் கூட்டணி: அகிலேஷ் - மாயாவதி கூட்டாக அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தை தொடர்ந்து, உத்தரகண்ட் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களிலும், கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி  கட்சியும் கூட்டாக அறிவித்துள்ளன.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் தனித்தனியாக போட்டியிட்டன. இதில் சமாஜ்வாதி 23, காங்கிரஸ் 21, பகுஜன் சமாஜ் 20, பாஜக 10 தொகுதிகளைக் கைப்பற்றின. 2014 தேர்தல்கடந்த 2014 மக்களவைத் தேர்தலிலும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் தனித்தனியாக போட்டியிட்டன.

நான்குமுனைப் போட்டியில் பாஜக 71 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சி யான அப்னா தளம் 2 தொகுதிகளைக் கைப்பற்றியது. சமாஜ்வாதிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ரேபரேலியில் சோனியா காந்தி, அமேதியில் ராகுல் காந்தி என காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

கடந்த 2017-ல் நடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று சமாஜ்வாதியிடம் இருந்து ஆட்சியைப் பறித்தது. 2018 இடைத்தேர்தல் இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச்சில் உத்தர பிரதேசத்தின் கோரக்பூர், புல்பூர் மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் கோரக்பூர், முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்த தொகுதியாகும். புல்பூர், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ராஜினாமா செய்த தொகுதியாகும்.

இந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களுக்கு பகுஜன் சமாஜ் பகிரங்கமாக ஆதரவு அளித்தது. இதன்காரணமாக இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதி வெற்றிவாகை சூடியது. பாஜக தோல்வியைத் தழுவியது.

இந்தப் பின்னணியில் வரும் மக் களவைத் தேர்தலுக்காக சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டன.  மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதிக்கு 37, பகுஜன் சமாஜுக்கு 38 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3 தொகுதிகள் அஜித் சிங்கின் ராஷ் டிரிய லோக் தளத்துக்கு ஒதுக்கப்படுகிறது.

சோனியா காந்தியின் ரேபரேலி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வில்லை.  எனினும், மொத்தமுள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று ராகுல் காந்தி ஏற்கெனவே அறிவித்துள்ளார். இதனால் ஆளும் பாஜக, சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி, காங்கிரஸ் இடையே மூன்று முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் உத்தர பிரதேசதத்தை தொடர்ந்து மத்திய பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. அதன்படி மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 3 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும், மற்ற இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிடுகின்றன. அதுபோலவே உத்தரகண்ட் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஓரிடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்ளகிலும், மீதமுள்ள ஓரிடத்தில் உள்ளூர் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த தகவலை அகிலேஷ் யாதவும், மாயாவதியும் இன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x