Published : 28 Feb 2019 07:48 AM
Last Updated : 28 Feb 2019 07:48 AM

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் போர் விமானங்கள் பறந்ததால் பெரும் பதற்றம்; பாகிஸ்தானில் தமிழக விமானி சிறைபிடிப்பு: பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை- அமைதி காக்க சீனா, ரஷ்யா, நேபாளம் வேண்டுகோள்

பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இது போல இந்திய போர் விமானத்தை பாகிஸ் தான் சுட்டு வீழ்த்தியதுடன், அதன் தமிழக விமானியை சிறை பிடித்துள்ளது. இதனால் எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோ சனை நடத்தினார். இதனிடையே இரு நாடுகளும் அமைதிகாக்க வேண்டும் என சீனா, ரஷ்யா, நேபாளம் ஆகிய நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத் தில் கடந்த 14-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பாகிஸ்தா னிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற் றது. இதையடுத்து, இந்தத் தாக்குதலுக்கு உரிய நேரத்தில் ராணுவம் பழி வாங்கும் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில், நமது விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக போர் விமா னங்கள் நேற்று முன்தினம் அதிகாலையில் பாகிஸ்தான் எல்லைக்குள் அதிரடியாக நுழைந்தன. பின்னர் பாலகோட், முஷாப ராபாத், சாகோட்டி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது குண்டு மழை பொழிந்துவிட்டு 12 போர் விமானங்களும் பத்திரமாக நாடு திரும்பின. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தரப்பில் கூறப்படுகிறது.

அதேநேரம், இந்திய போர் விமானங் களின் ஊடுருவலை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் உயிரிழப்பு எதுவும் இல்லை என கூறியது. இதனால் இரு நாடுகளுக் கிடையே பதற்றம் உருவானது. எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள ரஜவுரியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் இரவு அத்து மீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

இந்த சூழ்நிலையில், ரஜவுரி பகுதியில் நேற்று காலையில் இந்திய எல்லைக்குள் அத்து மீறி பறந்த பாகிஸ்தான் ராணுவத் தின் எப்-16 ரக போர் விமானம், இந்திய விமானப்படையின் மிக் 21 ரக விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

விமானி சிறைபிடிப்பு

அதேநேரம், தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 2 இந்திய விமானங் களை சுட்டு வீழ்த்தியதாகவும் இதில் ஒரு விமானம் காஷ்மீர் பகுதியிலும் மற்றொரு விமானம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீர் பகுதியிலும் விழுந்து நொறுங்கியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் 2 விமானிகளை சிறை பிடித்துள்ள தாகவும் அதில் காயமடைந்த ஒருவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக வும் தெரிவித்தது. எனினும், பின்னர் ஒருவரை மட்டுமே சிறை பிடித்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட் டது. இதனால் பதற்றம் மேலும் அதி கரித்தது.

இதையடுத்து, வட இந்தியாவில் உள்ள அமிர்தசரஸ், சண்டிகர், டேராடூன், ஜம்மு, நகர் மற்றும் லே உள்ளிட்ட 9 விமான நிலையங்களை மூட மத்திய அரசு உத்தர விட்டது. இதுபோல பாகிஸ்தானிலும் சில முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் விமான நிலையங்களை திறக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை செயலாளர்கள், உளவுத் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது எல்லையில் நிலவும் சூழல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

வீடியோ வெளியீடு

பாகிஸ்தான் ராணுவம் 46 விநாடிகள் ஓடக்கூடிய ஒரு வீடியோவை முதலில் வெளியிட்டது. அதில், கண்ணைக் கட்டிய படி ஒருவர் “நான் இந்திய விமானப்படை அதிகாரி. என்னுடைய பணி எண் 27981” எனக் கூறுகிறார். இவர்தான் அபிநந்தன் என கூறப்படுகிறது. அதேநேரம், இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டி உள்ளது என வெளியுறவுத் துறை கூறியது.

பின்னர் வெளியான மற்றொரு வீடியோ வில் அபிநந்தனை உள்ளூர் மக்கள் அடித்து இழுத்துச் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறப்படுகிறது. இதையடுத்து, அபிநந் தனை பொதுமக்களிடமிருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் மீட்டுச் சென்றனர்.

மற்றொரு வீடியோவில் ஒரு கண்ணில் காயமுடன் தோன்றும் அபிநந்தனிடம் அதிகாரி ஒருவர் உரையாடுகிறார் அதில் அபிநந்தன் கூறும்போது, “நான் நலமாக உள்ளேன். ராணுவத்தினர் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்” என கூறுகிறார்.

விடுவிக்க வேண்டுகோள்

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்திருப்பது உண்மைதான். ஆனால் அவருடைய புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மேலும் இந்த நட வடிக்கை ஜெனீவா உடன்படிக்கை மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறும் செயல் ஆகும். அவரை உடனடியாக பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர்

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு விமானப்படையில் இணைந்த இவர், தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் எனத் தெரிகிறது. இவரது தந்தை வர்த்தமானும் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று கூறும்போது, “போர் மூண்டால் நானோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியோ நினைத்தாலும் அதை நிறுத்த முடியாது. தீவிரவாத பிரச்சினை குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.

மேலும் டெல்லியில் உள்ள பாகிஸ் தான் துணைத் தூதர் சையத் ஹைதருக்கு வெளியுறவு அமைச்சகம் நேற்று சம்மன் அனுப்பியது. இதன்படி நேரில் ஆஜரான அவரிடம் எல்லையில் நடந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.

சீனா, ரஷ்யா, நேபாளம் வேண்டுகோள்

இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் கவலை அளிப்பதாக உள்ளது என ரஷ்யா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. அதேநேரம், அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் கட்டுப்பாட்டை கடை பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளன.

மரியாதையாகவே நடத்துகிறார்கள்..

நேற்று மாலை வெளியிடப்பட்ட வீடியோவில் அபிநந்தனுடன் பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் உரையாடுகிறார். அப்போது அபிநந் தன் தேநீர் குடித்துக்கொண்டே கூறும்போது, “பாகிஸ்தான் ராணு வம் என்னை நன்றாக நடத்துகிறது. நான் இந்தியாவுக்கு திரும்பி சென்றாலும் எனது கருத்தை மாற்ற மாட்டேன். பாகிஸ்தான் ராணு வத்தினரின் நடவடிக்கை விரும்பத்தக்க வகையில் உள்ளது. என்னை காப்பாற்றி நல்ல முறையில் கவனித்து வருகிறார்கள். பாகிஸ்தான் ராணுவ கேப்டன் முதல் வீரர்கள் வரை அனைவரும் என்னை மரியாதையாகவே நடத்துகிறார்கள்” என்றார்

மேலும் நீங்கள் இந்தியாவில் எந்தப் பகுதியை சேர்ந்தவர் என்ற கேள்விக்கு, இதற்கு பதில் அளிக்க வேண்டுமா என்ற அவர், தான் தென்னிந்தியாவை சேர்ந்தவர் என்று கூறுகிறார். மேலும் உங்கள் இலக்கு என்ன என்று கேட்கப்பட்ட போது அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தேநீர் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன் என அந்த அதிகாரி கூறும்போது, “தேநீர் மிகவும் நன்றாக உள்ளது. நன்றி” என அபிநந்தன் கூறுகிறார். எந்த விமானத்தை நீங்கள் ஓட்டினீர்கள் என்ற கேள்விக்கு, “இதுபற்றி சொல்லத் தேவையே இல்லை. ஏனென்றால் அந்த விமானம் நொறுங்கியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x