

ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினர் தங்கியிருந்த பாலாகோட் தீவிரவாத முகாம் மீதான தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள், தற்கொலைப் படையினர் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலை அடுத்து, இந்திய மிராஜ் வகைப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. இதில் பாலாகோட், சக்கோத்தி மற்றும் முஸாஃபராபாத்தில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''எங்களுக்குக் கிடைத்த நம்பகமான உளவுத்துறை தகவலின்படி, நாட்டின் பல்வேறு இடங்களில் ஜெய்ஷ் இ முகமது தற்கொலைப்படைத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்தது. இதற்காக ஏராளமான தற்கொலைப் படைத் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக அவர்கள் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்துவது முக்கியமானதாக மாறியது.
அத்துடன் தாக்குதல் நடத்தும் இடத்தைத் தேர்வு செய்வதில் இன்னொரு விதிமுறையையும் கடைபிடித்தோம். அது, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தாக்குதலை நடத்துவது.
பாலாகோட் பகுதி, மலை உச்சியின் மீதுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளது. இதன் அடிப்படையில் பாலாகோட்டை இந்தியா தேர்வு செய்தது. அங்குள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்தது.
விமானப் படை நடத்திய இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமதின் ஏராளமான தீவிரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள் மற்றும் தற்கொலைப் படையினர் கொல்லப்பட்டனர். இந்த முகாமுக்கு மெளலானா யூசுஃப் அசார் என்று அழைக்கப்படும் உஸ்தாத் கவுரி என்பவர் தலைமையேற்றிருந்தார். இவர் ஜெய்ஷ் இ முகமதின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் ஆவார்.
தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் போராட அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா தீவிரத்துடன் எடுத்து வருகிறது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தைத் தனது மண்ணிலோ, பிரதேசத்திலோ அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் 2004-ல் கூறியது. இனியாவது மற்ற இடங்களில் உள்ள அனைத்து தீவிரவாத மற்றும் ஜெய்ஷ் இ முகமது இயக்கங்களை ஒழிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்'' என்று விஜய் கோகலே தெரிவித்தார்.