

எனது மகனால் கொல்லப்பட்ட சிஆர்பிஎப் வீரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினர் வலி எனக்குப் புரிகிறது என்று ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதியின் தந்தை வேதனையுடன் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்தவியாழக்கிழமை, சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்தின் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அதன்பின் அந்தத் தீவிரவாதி வெளியிட்ட வீடியோவில், தனது பெயர் அதில் அகமது தார் என்றும், புல்வாம மாவட்டம், காக்கபோரா கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிவித்தார். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் சேர்ந்து இந்த செயலைச் செய்தார் எனத் தெரிவித்தார்.
தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
தாக்குதல் நடந்து முடிந்தவுடன், தீவிரவாதி அகமது தாரின் வீடியோவைப் பார்த்த காக்கபோரா கிராம மக்கள் ஒரு குடிசை வீட்டில் வசிக்கும் தீவிரவாதியின் தந்தை குலாம் ஹசனைச் சந்தித்துக் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை.
ஆங்கில இணையதளம் சார்பில் தீவிரவாதி அகமது தாரின் தந்தை குலாம் ஹசனைச் சந்தித்துள்ளனர். அவர் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், " சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதை நினைத்து நானும், எங்களின் குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடையவில்லை. அந்த வீரர்களை இழந்து அவர்களின் குடும்பத்தினர் அனுபவிக்கும் வலி எனக்குப் புரிகிறது. இதை வலியைத்தான் நான் காஷ்மீரில் காலங்காலமாக அனுபவித்து வருகிறோம்.
என் மகனை இழந்து தவிக்கும் இந்நேரத்தில் இளைஞர்களுக்கு எந்தவிதமான செய்தியும் கூற நான் விரும்பவில்லை. ஆனால், அரசுக்கு நான் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், விரைவில் இந்தத் தீவிரவாத பிரச்சினைக்கும், வன்முறைக்கும் தீர்வு கண்டு, இளைஞர்கள் மோசமான பாதையில் செல்வதைத் தடுத்து நிறுத்துங்கள்.
என்னுடைய மகன் கடந்த ஆண்டு மார்ச் 18-ம் தேதி திடீரென்று காணாமல் போனான். அதன்பின் அவனைக் கண்டுபிடிக்க பல முயற்சி எடுத்தும் முடியவில்லை. ஆனால், எப்படியும் வருவான் என்று நம்பி இருந்தேன். ஆனால், இனிமேல் வரமாட்டான் என்று தெரிந்துவிட்டது. நிச்சயமாக என் மகன் பணத்துக்காக தீவிரவாத அமைப்பில் சேர்ந்திருக்கமாட்டான். அவனுக்குப் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது " எனத் தெரிவித்தார்.