Last Updated : 15 Feb, 2019 09:17 AM

 

Published : 15 Feb 2019 09:17 AM
Last Updated : 15 Feb 2019 09:17 AM

மீண்டும் துல்லியத் தாக்குதல்?- பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: சிஆர்பிஎப் வீரர்கள் பலி 45 ஆக அதிகரிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நேற்று தீவிரவாதி தற்கொலைப்படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதையடுத்து அதுகுறித்த முக்கிய முடிவுகளை எடுக்கப் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத் துறை அமைச்சரவைக்கூட்டம் இன்று காலை அவசரமாகக் கூடுகிறது.

இந்தக் கூட்டத்தில் தீவிரவாதிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மத்தியஅரசு ஏதேனும் முக்கிய முடிவுகளை எடுக்கலாம் எனப் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, கடந்த 2016 செப்டம்பரில் காஷ்மீரின் யூரி ராணுவ முகாம் மீது ஜெய்ஷ்-இ-முகமது தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக செப்டம்பர் 28-ம் தேதி காஷ்மீரை ஒட்டிய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் நுழைந்து ஏராளமான தீவிரவாத முகாம்களை அழித்தனர். தற்போதும் அதேபோல பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஜம்முவில் இருந்து சிறீநகருக்கு நேற்று மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றனர். அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தார்.

இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 45  சிஆர்பிஎப் வீரர்களால் 44 பேர் கொல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை ஒரு வீரர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 38 சிஆர்பிஎப் வீரர்கள், பாதாமிபாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் 45 பேர் தீவிரவாதியால் கொல்லப்பட்டது குறித்து அவசர முடிவுகள் எடுக்கப் பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 9 30.மணி அளவில் டெல்லியில் கூடுகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், தீவிரவாதி தாக்குதல் குறித்த செய்தி அறிந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்வீடன் பயணத்தை ரத்து செய்து உடனடியாக நாடு திரும்பினார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கும் லக்னோ பயணத்தை ரத்து செய்து நேற்று இரவு டெல்லி விரைந்தார்.

இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்தியஅமைச்சர்கள் அருண் ஜேட்லி, பியூஷ் கோயல், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமரின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும், இந்தக் கூட்டத்தில் தீவிரவாதிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மீண்டும் ஒரு துல்லியத் தாக்குதல் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தை முடித்துக்கொண்டு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீர் சென்று தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களையும், காயமடைந்த வீரர்களையும் சந்திக்கிறார்.

மேலும், தீவிரவாத தாக்குதல்கள் குறித்து விசாரித்து வரும் தேசிய புலனாய்வு பிரிவு(என்ஐஏ) 12 பேர் கொண்ட குழு இன்று காலை புல்வாமா சென்று தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தையும், வாகனங்களையும் ஆய்வு செய்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x