

இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்காலப் பட்ஜெட்டில் பெண்களுக்கான பிரசவ விடுப்பு 26 வாரங்களாக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது பிரதமர் நரேந்திர மோடி அரசின் ‘ஜும்லா’ அறிவிப்பு என அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் எஸ்.சாந்தினிபீ கருத்து கூறி உள்ளார்.
மத்திய அரசு அலுவலகப் பெண்களுக்கு பிரசவ விடுப்பு சம்பளத்துடன் ஆறு மாதங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இதை 26 வாரங்களாக கூட்டியிருப்பதாக மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் இன்று அறிவித்திருந்தார்.
ஏற்கெனவே உள்ள ஆறு மாதங்களின்படி இடையில் 31 தேதிகளிடன் வரும் மாதங்களும் உண்டு. இதன்படி நாட்களின் எண்ணிக்கை சுமார் 183 வரும் வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில், வெளியான புதிய அறிவிப்பில் அவை 26 வாரங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
வாரத்தில் மொத்தம் உள்ள ஏழு நாட்களைக் கூட்டினால் அதன் எண்ணிக்கை மொத்தம் 182 ஆகும். ஏற்கெனவே 183 உள்ளபோது ஒருநாள் குறைந்த நிலையில் 26 வாரம் என்பது பிரதமர் மோடி அரசின் ‘ஜும்லா’ அறிவிப்பு எனப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியரான முனைவர் எஸ்.சாந்தினிபீ கூறும்போது, ''ஆறு மாதங்களாக உள்ள பிரசவ விடுப்பை 26 வாரங்களாக மாற்றி வெளியான அறிவிப்பில் வெறும் இரண்டு தினங்கள் மட்டுமே கூடுதல் விடுப்பு கிடைக்கும். 31 தேதி கொண்ட மாதங்களாக இருந்தால் அதை விட அதிக நாட்கள் அளிக்கப்பட்டது. எனவே இது ஒரு ஜிம்லா அறிவிப்பாகவே கருத வேண்டி உள்ளது'' எனத் தெரிவித்தார்.