ஒரே மேடையில் சோனியா, ராகுலுடன் பிரியங்கா: பிப்ரவரி 28-ல் மோடியின் சொந்தமாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் துவக்கும் காங்கிரஸ்

ஒரே மேடையில் சோனியா, ராகுலுடன் பிரியங்கா: பிப்ரவரி 28-ல் மோடியின் சொந்தமாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் துவக்கும் காங்கிரஸ்
Updated on
2 min read

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்து மக்களவை தேர்தல் பிரச்சாரம் துவக்குகிறது காங்கிரஸ். பிரியங்கா வத்ராவின் முதல் அரசியல் மேடையான இதில் அவரது தாய் சோனியா காந்தி மற்றும் சகோதரர் ராகுல் காந்தியும் மேடை ஏறுகின்றனர்.

மார்ச்சில் அறிவிப்பதாக எதிர்பார்க்க்கப்படும் மக்களவை தேர்தலுக்கானப் பிரச்சாரத்தை பாஜக முன்கூட்டியே துவக்கி நடத்தி வருகிறது. இதில் சற்று பின்தங்கி விட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன் பல்வேறு பிரிவுகளின் மாநாட்டு மேடைகளில் மட்டும் பேசி வருகிறார்.

பல்வேறு மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தைகளினால் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரம் தாமதமாகி வருகிறது. இது தற்போது முடிவுபெறவிருக்கும் நிலையில் தன் முதல் பிரச்சாரக் கூட்டத்தை குஜராத்தில் பிப்ரவரி 28-ல் துவக்குகிறது.

பிப்ரவரி 26-ல் சுமார் 60 ஆண்டுகளுக்கு பின் குஜராத்தின் அகமதாபாத்தில் காங்கிரஸின் காரியகமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. இந்த 51 ஆவது காரியகமிட்டி கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிகழ்வுகளும், மக்களவை தேர்தலுக்கான ஆலோசனையும் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தை அடுத்து, அதேமாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸின் முதல் பிரச்சாரக் கூட்டமும் நடைபெறுகிறது. பிப்ரவரி 28-ல் நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வரும் மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் துவக்கும் முதல் பிரச்சாரமான இது பிரியங்காவிற்கான முதல் அரசியல் மேடைக்கூட்டமாகவும் அமைய உள்ளது. இதில், பிரியங்காவுடன் சோனியா மற்றும் ராகுலும் மேடை ஏறுகின்றனர்.

கடைசியாக கடந்த நவம்பரில் தெலுங்கானாவில் அம்நில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் சோனியா பேசியிருந்தார். அதன் பிறகு அவர் மேடை ஏறும் முதல் கூட்டமாகவும் இது அமைய உள்ளது.

இந்த முதல் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது கட்சித் தலைவர் அமித்ஷாவின் சொந்த மாநிலத்தில் துவக்குவதன் மூலம் அவர்களுக்கு காங்கிரஸ் சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.

அகமதாபாத்திற்கு அருகிலுள்ள காந்திநகர் மாவட்டத்தின் அதாலஜ் கிராமப்பகுதியிலுள்ள திராய்மந்திர் மைதானத்தில் அக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மைதானம் காங்கிரஸ் அரசியல் வரலாற்றில் முக்கிய சிறப்பு பெற்றதாகக் கருதப்படுகிறது.

இதே மைதானத்தில் 1980-ல் இந்திரா காந்தியும், 1984-ல் மகன் ராஜீவ் காந்தியும், அவரது மனைவியான சோனியா 2004-லும் மக்களவை தேர்தல் பிரச்சாரம் துவக்கி அந்த மூன்றுமுறையும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

மூவர் ஏறும் முதல் அரசியல் மேடை

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் குஜராத் காங்கிரஸின் செய்தி தொடர்பாளரான சக்திசின் கோஹில் கூறும்போது, ‘குஜராத் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கூட்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது, சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா ஏறும் முதல் மேடையாக இருக்கும்.’ எனத் தெரிவித்தார்.

குஜராத்தில் காங்கிரஸுக்கு ஒரு தொகுதியும் இல்லை

கடந்த 2014 மக்களவை தேர்தலில் குஜராத்தின் 26 தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in