Published : 18 Feb 2019 12:33 PM
Last Updated : 18 Feb 2019 12:33 PM

புல்வாமா தாக்குதல்: ‘‘பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு இனி ‘ஸ்பான்சர்’ கிடையாது’’ - ரிலையன்ஸ் அதிரடி அறிவிப்பு

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்பான்சர் நிதியுதவியை நிறுத்தப்போவதாக ஐஎம்ஜி -ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்.

இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தால் நாடுமுழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு வர்த்தக முன்னுரிமை நாடு என்ற சலுகையை மத்திய அரசு ரத்து செய்தது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பால் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு 200 சதவீத வரி விதித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானை வர்த்தக ரீதியாக தனிமைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஸ்பான்சரை நிறுத்தப்போவதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஐஎம்ஜி- ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிப்பு பங்குதாரராக இருந்து வருகிறது. போட்டிகள் நடப்பது, போட்டி ஒளிபரப்பு, விளம்பரம் என அனைத்தையும் ஐஎம்ஜி - ரிலையன்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்து வருகிறது.

மேலும் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒளிபரப்பும் உரிமை மற்றும் நடவடிக்கைகளை ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் டி- 20 போட்டிகளுக்கான ஸ்பான்சர், நிதியுதவி அனைத்தையும் நிறுத்துவாக ஐஎம்ஜி- ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளுக்கு ஐஎம்ஜி -ரிலையன்ஸ் நிறுவனம் மிக முக்கியமான ஸ்பான்சராக விளங்கி வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x