

வீட்டு வேலைகளில் உதவி செய்வதில்லை என்ற காரணத்தைக் கூறி தனது பெண் குழந்தைக்கு பெற்ற தாயே 20 இடங்களில் சூடு வைத்த கொடுமை மும்பையில் நேற்று நடந்தது.
இதுகுறித்து மூத்த காவல் ஆய்வாளர் சதீஷ் கெய்க்வாட் தெரிவித்த விவரம்:
''பெண் குழந்தை ஒழுக்கமாக வளர வேண்டும் என்று அவரது தாயும் சித்தியும் விரும்பி சூடு வைத்துள்ளனர். குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குழந்தையின் உடல் முழுவதும் ஏறக்குறைய 20 இடங்களில் தீக்காயங்கள் உள்ளன. மெழுகுவர்த்தி தீபத்தால் இக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
குழந்தை தனக்கு உதவியாக இருப்பதில்லை. ஏதாவது குழப்பம் செய்துகொண்டே இருப்பதால் குழந்தை திருந்தவேண்டும் என்பதற்காகவே சூடு வைத்ததாக அந்தத் தாய் கூறினார். இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது''.
இவ்வாறு மூத்த காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை தெரிவிக்கையில், ''எனது குழந்தை சாதாரணமாகவே குறும்புத்தனம் மிக்கவள். சில நேரங்களில் இது தவறாகி விடுகிறது. இதற்காக என் மனைவியும் அவரது சகோதரியும் சேர்ந்துகொண்டு மெழுகுவர்த்தியால் என் குழந்தையின் உடல் முழுவதும் தீக்காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். நான் புகார் அளித்ததால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.