குடியுரிமை மசோதா குறித்து அவதூறு கிளப்பும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி சாடல்

குடியுரிமை மசோதா குறித்து அவதூறு கிளப்பும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி சாடல்
Updated on
1 min read

குடியுரிமை மசோதா குறித்து சிலர் ஏசி அறைக்குள் இருந்து கொண்டு தவறான  தகவல்களை பரப்புகின்றனர் என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

அசாமில் உள்ள வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அம்மாநிலத்தில் குடிமக்கள் தேசிய பதிவேடு கொண்டு வரப்பட்டது. இதன்படி குடியுரிமை  மசோதா, மக்களவையில் கடந்த ஜனவரி 8- ம் தேதி குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இதில், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து 6 ஆண்டுகளாக வசித்து வரும் இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அசாம் மட்டுமின்றி வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்தநிலையில் பிரதமர் மோடி 2 நாட்களாக வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்துக்கிடையே அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரமான இட்டாநகரில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.4000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஹொல்லோங்கி பகுதியில் அமைக்கப்பட்ட க்ரீன்ஃபீல்டு விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டிய மோடி, லோஹித் மாவட்டத்தின் தெஸுவில் விமான நிலையத்தைத் திறந்துவைத்தார்.

அருணாச்சலப் பிரதேசத்துக்கான புதிய தூர்தர்ஷன் சேனலான டிடி அருண் பிரபாவையும் திறந்து வைத்துப் பேசினார்.110 வாட் நீர்மின் ஆலையைத் தேசத்துக்கு அர்ப்பணித்த மோடி, ஜோட் பகுதியில் திரைப்படம் மற்று தொலைக்காட்சிக்கான இந்தியக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன் ஐஜி பூங்காவில் நடந்த விழாவில் 50 சுகாதார மையங்களையும் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இதைத்தொடர்ந்து அசாம் மாநிலம் சங்சாரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:

குடியுரிமை மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. டெல்லியில் ஏசி அறைக்குள் இருந்து கொண்டு சிலர் குடியுரிமை மசோதா பற்றி திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர்களுக்கு வடகிழக்கு மாநில மக்கள் மீது அக்கறை இல்லை.

தங்கள் சுயநலத்துக்காகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். வெளிநாட்டில் இருந்து வடகிழக்குகளில் புகுந்து இங்குள்ள வளத்தை சுரண்டுபவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். வடகிழக்கு மாநிலங்களை சுரண்டுவதற்காக ஊடுருவியவர்களுக்கும், தங்கள் மதநம்பிக்கயால், அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கும் உள்ள வித்தியாசம் எங்களுக்கு நன்றாகவே தெரியும். அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in