

இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி தீவிரவாதிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள், இதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று பிரதமர் மோடி ஆவேசமாகத் தெரிவித்தார்.
நாட்டின் அதிவேக ரயிலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எஞ்சின் இல்லாத ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்' தொடக்க விழா டெல்லியில் இன்று நடந்தது. இந்த வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎப் ரயில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.
முதல்கட்டமாக வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசம் வாரணாசிக்குப் பயணமானது. காலை 11.20 மணிக்குப் பிரதமர் மோடி கொடியசைக்க ரயில் புறப்பட்டது.
முன்னதாக நடந்த கூட்டத்தில் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தானுக்கு மறைமுகமாகக் கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடி பேசினார்.
அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் 45 இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்து, தீவிரவாதிகள் மோசமான தவறு செய்துவிட்டார்கள். இந்த தவறுக்கு காரணமான தீவிரவாதிகள், பொறுப்பானவர்கள் நிச்சயம் மிகப்பெரிய விலை கொடுத்தே தீரவேண்டும்.
நம்முடைய பாதுகாப்புப் படையினருக்கு முழுமையான சுதந்திரம் அளித்துள்ளோம். வீரர்களின் வீரத்தின் மீதும், துணிச்சல் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம்.
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள், ஆதரவு கொடுத்தவர்கள்கூட இந்திய ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பாவார்கள், அந்த மோசமான தவறை செய்திருக்கிறார்கள். அவர்களும் அதற்கான விலை கொடுக்கநேரிடும். இந்தத் தாக்குதலுக்கு பின்னால் இருப்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று இந்தத் தேசத்துக்கு உறுதியளிக்கிறேன்.
நம்முடைய அண்டை நாடு (பாகிஸ்தான்) ஏற்கெனவே சர்வதேச சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. இந்தியாவின் நிலைத்தன்மைக்கும், அமைதிக்கும் பிரச்சினை உருவாக்க நினைத்தால், உணர்ந்தால், ஏதேனும் சதி செய்தால் அது மிகப்பெரிய தவறாக அமையும்.
இந்த தேசமும், மக்களும் மிகப்பெரிய கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிவேன். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு என் இரங்கலைத் தெரிவிக்கிறேன். இந்தக் கடினமான நேரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு அளித்து , தாக்குதலைக் கண்டித்த அனைத்து நாடுகளுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன் .இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி இந்த உரையை நிகழ்த்துவதற்கு முன்பாக, பாகிஸ்தானுக்கு வர்த்தகரீதியாக, நட்புறவான நாடு என்று வழங்கி இருந்த அந்தஸ்தை மத்திய அரசு பறித்தது என்பது குறிப்பிடத்தக்கது.