

புல்வாமாவில் நடத்தப்பட்ட மிகக்கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ள நிலையில் சமூகவலைத்தளங்களில் மாறி மாறி பொய்ச்செய்திகள் பரவலாக்கம் பெற்று வருகின்றன.
அப்படிப்பட்ட பொய்ச்செய்தி ஒன்றில் பாஜக எம்.பி. நேபாள் சிங் கடந்த ஆண்டு கூறியதை புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு கூறியதாக பரப்பப்பட்டது பொய்ச்செய்தி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
பாஜக எம்.பி. நேபாள் சிங் கடந்த ஆண்டு, “ராணுவ வீரர்க்ள் கொல்லப்படுவது இயல்பானது. அதற்காகத்தான் அவர்களுக்கு சம்பளம் அளிக்கப்படுகிறது” என்ற ரீதியில் இந்தியில் அவர் அப்போது கூறியது இப்போது சமூகவலைத்தளங்களில் பொய்யாக வைரலாக்கப்பட்டு வருகிறது.
மும்பை காங்கிரஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் ஹேண்டிலிலும் பாஜக எம்.பி.யின் அப்போதைய கூற்று இப்போது கூறப்பட்டதாகப் பதிவிட்டு பாஜகவுக்கு உணர்வு இல்லை என்பது போல் ட்வீட் செய்துள்ளது.
பாஜக எம்.பி நேபாள் சிங்கின் கூற்று ‘வீ ஹேட் நரேந்திர மோடி’ என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த முகநூல் பக்கத்துக்கு அதிக வரவேற்பு உண்டு, நிறைய பேர் இதனைப் பின் தொடர்கின்றனர், மேலும் இதில் பாஜக-எதிர்ப்பு பொருளடக்கங்கள் அதிகம் பதிவாகும். இந்தப் பக்கத்தில் ஏற்கெனவே பலமுறை தவறான செய்திகள் இடப்பட்ட் பரப்பப் பட்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. பாஜக எம்.பியின் இந்தக் கூற்று தனிப்பட்ட முகநூல் மற்றும் டிவிட்டர் பயனாளிகள் பக்கங்களிலும் பகிரப்பட்டுள்ளது.
இந்த பாஜக எம்.பியின் கூற்று மிகச்சரியாக நேபாள் சிங்கின் கூற்று என்பதைப் பகிர்ந்துள்ள வலைத்தளங்கள், இது கடந்த ஜனவரி 2018-ல் வெளியிடப்பட்ட கருத்து, புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு வெளியிடப்பட்டதல்ல என்பதை மறைத்து விட்டது. ஆனால் அப்போது பாஜக எம்.பி. நேபாள் சிங் கூறியதும் டிசம்பர் 31, 2017-ல் சிஆர்பிஎப் முகாம் மீது நடத்ததப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 4 வீரர்கள் பலியானதையடுத்து கூறப்பட்ட வாசகமாகும்.
அப்போதே பாஜக எம்.பி.யை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்... ஆனால் அதனை இப்போது எடுத்துப் போட்டு வைரலாக்குவது விஷமிகளின் செயலாகத் தெரியவந்துள்ளது. புல்வாமாவை முன் வைத்து இதுபோன்று நிறைய விஷ(ம)ச் செய்திகள் உலாவருகின்றன. இது குறித்து வாசகர்கள் எச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்படுவது தேசத்துக்கு நல்லது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.