அமைச்சர் எனக் கூறி கர்நாடக சட்டப்பேரவையில் அறை எடுத்துத் தங்கி தமிழக தொழிலதிபரிடம் ரூ. ஒரு கோடி மோசடி செய்த கும்பல் கைது

அமைச்சர் எனக் கூறி கர்நாடக சட்டப்பேரவையில்  அறை எடுத்துத் தங்கி தமிழக தொழிலதிபரிடம் ரூ. ஒரு கோடி மோசடி செய்த கும்பல் கைது
Updated on
2 min read

கர்நாடக மாநில சட்டப்பேரவையான விதான்சவுதாவில் உள்ள வளாகத்தில் அறை எடுத்துத் தங்கி, அமைச்சர் எனக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.1.12 கோடி மோசடி செய்த 8 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அமைச்சர் எனக்கூறி மோசடி செய்த கார்த்திகேயன் (வயது 60), அவரின் மகன் ஸ்வரூப் (வயது 30) உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:

''தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் தொழில் கூட்டாளி இந்திரா. இருவரும் சேர்ந்து முந்திரிப் பருப்பு வியாபாரம் செய்து வருகின்றனர்.  தங்களின் தொழிலுக்குப் போதுமான முதலீடு இல்லாமல் திணறி வந்தனர்.  யாரேனும் முதலீடு அல்லது மிகப்பெரிய கடன் அளிப்பார்களா என்றும் விசாரித்து வந்தனர்.

அப்போது ஒரு கும்பல் ரமேஷ், இந்திரா ஆகியோரை அணுகியது. அவர்களிடம் கர்நாடக அமைச்சர் ஒருவரிடம் ஏராளமான பணம் இருக்கிறது, அவர் சரியான முதலீட்டாளர்களைத் தேடி அலைந்து வருகிறார். அவரிடம் கடன் பெற்றுத் தருகிறோம் என்று ரமேஷ், இந்திராவை அந்த கும்பல் பெங்களூரு அழைத்துச் சென்றது.

அதன்படி, பெங்களூரில் உள்ள விதான் சவுதா (சட்டப்பேரவை) வளாகத்துக்கு ரமேஷ், இந்திராவைக் கடந்த ஜனவரி 2-ம் தேதி அந்த கும்பல் அழைத்துச் சென்றது. அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேர் புடைசூழ கார்த்திகேயன் என்பவர், தன்னைக் கர்நாடக அமைச்சர் கே.கே.ஷெட்டி என்று அறிமுகம் செய்துகொண்டார். தனக்கு பல்வேறு அமைச்சர்களைத் தெரியும், முக்கியத் தொழிலதிபர்களைத் தெரியும் என்று கார்த்திகேயன் தெரிவித்ததால், ரமேஷ், இந்திரா ஆகியோர் அவரை நம்பினார்கள்.

கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் அறை எடுத்துத் தங்குவதற்காகவும், தன்னை அமைச்சர் என்று காட்டிக்கொள்ளவும், அங்குள்ள பாதுகாவலர்களுக்கு கார்த்திகேயன் லஞ்சம் வழங்கியுள்ளார்.

அப்போது கார்த்திகேயனிடம் பேசிய ரமேஷ் தங்களின் தொழிலுக்கு ரூ.100 கோடி கடன் தேவை என்று கூறியுள்ளார். தேவையான கடனை ஏற்பாடு செய்வதாகவும், முறைப்படி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என கார்த்திகேயன் அவர்களை நம்பும் வகையில் கூறியுள்ளார்.

முதல்கட்டமாக முத்திரைத்தாள் வாங்குவதற்காக ரூ.1.12 கோடி பணத்தைத் தாருங்கள் என்று ரமேஷ், இந்திராவிடம் கார்த்திகேயன் கேட்டுள்ளார். அதன்படி பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கார்த்திகேயனைச் சந்தித்து ரூ1.12 கோடி பணத்தை ரமேஷ் அளித்துள்ளார்.

மேலும், ரூ.50 ஆயிரம் பணத்தை ஒரு வங்கிக்கணக்கிற்குத் தனியாக அனுப்பும்படி கார்த்திகேயன் ரமேஷுக்கு கூறியுள்ளார். அதன்படி ரமேஷ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், பணத்தைக் கொடுத்து பல நாட்களாகியும் கடன் தொகை வரவில்லை என்பதால், கர்நாடக போலீஸில் ரமேஷ், இந்திரா புகார் செய்தனர். இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், அமைச்சர் என்று கூறி ஏமாற்றி, சட்டப்பேரவை வளாகத்தில் தங்கியதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன்பின் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி அமைச்சர் கே.கே.ஷெட்டி என்று கூறி மோசடியில் ஈடுபட்ட கார்த்திகேயன்(வயது 60) என்பவரையும், அவரின் மகன் கே.ஸ்வரூப்(வயது 30) என்பவரையும் கைது செய்தனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் அந்த கும்பலைச் சேர்ந்த மணிகண்டவாசன் என்கிற அஜெய்(வயது 25), தியாகராஜா நகரைச் சேர்ந்த சுமன் (வயது 27), அபிலாஷ்(வயது 27), தஞ்சையைச் சேர்ந்த ஆர் கார்த்திக்(வயது 34), பழைய குரபனபாளையா பகுதியைச் சேர்ந்த ஜோமன்(வயது 49) ஆகியோரைக் கைது செய்தனர்.

இது தவிர திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபு என்கிற ராமச்சந்திரன் (வயது 30) என்பவரையும் கைது செய்தனர்.

மேலும், சட்டப்பேரவை வளாகத்தின் முதல் தளத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களின் அலுவலகங்கள், ஓய்வறைகள் உள்ளன. அதை யாருக்கும் தெரியாமல் கார்த்திகேயனுக்கு வாடகைக்கு விட்ட மகாதேவன் சாமி என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த விசாரணையில் முக்கியத் திருப்பமாக ரமேஷ் ஆன்லைனில் பரிமாற்றம் செய்த வங்கிக் கணக்கின் உரிமையாளரை போலீஸார் தேடியதில் அவர் கர்நாடகத்தின் கர்வார் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பெயரில் இந்த கும்பல் கைது செய்யப்பட்டது. மேலும், தமிழகத்தின் கரூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

கார்த்திகேயனிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, கார்த்திகேயனின் தந்தை பழனியப்பன் கடந்த 1950-ம் ஆண்டு சிவாஜி நகர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்ததால், அதைவைத்து அதிகாரிகளிடம் பழகியதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கார்த்திகேயன் அவரின் கும்பல், தமிழகத்திலும் பல்வேறு நகரங்களிலும் குழு அமைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது''.

இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in