கள்ளச்சாராயம் குடித்து சாகும் அப்பாவி மக்கள்; உ.பி அரசு மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

கள்ளச்சாராயம் குடித்து சாகும் அப்பாவி மக்கள்; உ.பி அரசு மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் கள்ளச் சாராயம் அருந்தி 14 பேர் உயிரிழந்ததை அடுத்து அதற்கு காரணம் மாநில பாஜக அரசே என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு சம்பவங்களில் ஒரேநாளில் 14 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.

குஷிநகர் அருகே அடார்யாசுஜன் கிராமத்தில் 9 பேரும் சஹரன்பூரில் உமாஹி கிராமத்தில் 5 பேரும்  உயிரிழந்ததாக மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அவாநிஷ் அவாஸ்தி தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளூர் கலால்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மக்கள் சாக காரணமாக இருந்த சட்டவிரோத மதுபானம் தயாரிப்பாளர்களையும், விற்பனை செய்தவர்களையும் உடனடியாக கைதுசெய்யவும் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படுமென்றும் மாநில செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்ததாவது:

பாஜக அரசு மாட்டு அரசியல் செய்வதற்காக பணத்தை வாரி இறைத்து வருகிறது. இதில் இறையாகிவரும் அப்பாவி மக்களுக்கு போதுமான அறிவும் இல்லை.

இதனால் அப்பணத்தைக் கொண்டு கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழக்கின்றனர். மதுபான மாஃபியாவை இந்த அரசு பாதுகாத்து வருவதோடு அவர்களை ஆதரித்தும் வருகிறது.

இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in