புல்வாமா தாக்குதல் எதிரொலி: ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திடீர் வாபஸ்

புல்வாமா தாக்குதல் எதிரொலி: ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திடீர் வாபஸ்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திடீரென வாபஸ் பெற்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளது.

புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த நிகழ்வையடுத்து, இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

சிறீநகருக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், " ஜம்மு காஷ்மீரில் உள்ள சிலர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடமும், தீவிரவாத அமைப்புகளிடமும் தொடர்பு வைத்துள்ளார்கள். அவர்களுக்கான பாதுகாப்பை திரும்பப் பெறுவோம்" எனத் தெரிவித்திருந்தார். அதன்படி இப்போது திரும்பப் பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரிவினைவாத தலைவர்கள், மிர்வாஸ் உமர் பரூக், அப்துல் கானி பாட், பிலால் லோன், ஹசிம் குரோஷி, ஷபிர் ஷா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு இன்று மாலைக்குள் விலகிக்கொள்ளப்படும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால், அதேசமயம், பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத தலைவர் சயித் அலி ஷா கிலாணிக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறுவது குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவில், " பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து பாதுகாப்பும், வாகனங்களும் ஞாயிறு மாலைக்குள் திரும்பப் பெற வேண்டும். எந்தவிதமான பாதுகாப்பும் வழங்கப்படாது" எனத் தெரிவிக்கப்பட்டது.

பிரிவினைவாத தலைவர்களுக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்கிவந்தால், நாங்களும் இந்த உத்தரவுப்படி உடனடியாக பாதுகாப்பு வழங்கியதை திரும்பப் பெறுவோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in