

மக்களவைத் தேர்தல்கள் நெருங்கும் வேளையில், 36 பாலிவுட் ஆளுமைகள் தங்கள் சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு பிரச்சார விளம்பரம் செய்யத் தயாராக இருப்பதாக புலனாய்வு ஊடகமான கோப்ரா போஸ்ட் வெளிப்படுத்தியுள்ளது.
பொதுத் தொடர்புகள் முகமை ஒன்றை பிரதிநிதித்துவப் படுத்துவதாக கோப்ரா போஸ்ட் நிருபர்கள் பல நடிகர்கள், பாடகர்கள், நகைச்சுவை நடிகர்கள், நடனக்கலைஞர்கள், ஆகியோரை அணுகி ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான தொகை என்று பேசி தங்கள் பல்வேறு சமூகவலைத்தளங்களில் அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் தேடித்தருமாறு கேட்டுள்ளனர். அப்போது சில பிரபலங்கள் பதிவு ஒன்றிற்கு ரூ.50 லட்சம் வரை கேட்டதாக கோப்ரா போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஆனால் 4 பிரபலங்கள் நேரடியாக, உடனடியாக இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கோப்ரா போஸ்ட் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தப் புலனாய்வு கடந்த ஆண்டு செய்யப்பட்டது என்றும் இதனை முழுமையாகத் தயாரித்து வெளியிட காலம் எடுத்துக் கொண்டதாகவும் கோப்ரா போஸ்ட் எடிட்டர் அனிருத்தா பாஹல் தெரிவித்தார்.
“இவ்வாறு அரசியல் கட்சிகளை பணம் பெற்றுக் கொண்டு புரமோட் செய்ய பிரபலங்கள் ரொக்கமாக, அதாவது கறுப்புப் பணமாகக் கேட்டனர்” என்று கோப்ரா போஸ்ட் செய்தி அறிக்கை கூறுகிறது.
“பல்வேறு விவகாரங்கள் குறித்து தங்களுக்கு வழங்கப்படும் உள்ளடக்கங்களை கொஞ்சம் அப்படி இப்படி மாற்றி தங்கள் சொந்த கருத்துக்கள் போல் சமூகவலைத்தளங்களில் வெளியிட தயாராக இருந்தனர். மேலும் தங்கள் பான் எண், வங்கி விவரங்களையும் எங்களுக்கு அளிக்கத் தயாராக இருந்தனர். பலர் இந்த விவரங்களை அளிக்கவும் செய்தனர். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையின் ரகசியங்களையும் காப்போம் என்று உறுதி மொழி கொடுத்தனர்” என்று கோப்ரா போஸ்ட் தெரிவித்துள்ளது.
சில நடிகர்கள் தங்கள் செய்தியாளர்கள் சந்திப்பிலும் பட விளம்பர நிகழ்ச்சிகளிலும் மறைமுகமாக அரசியல் கட்சியை விளம்பரப்படுத்துகிறோம் என்று முன்மொழிந்தனர், சிலர் சமூகவலைத்தளங்களில் அரசியல் கட்சியை விளம்பரப்படுத்தும் வீடியோக்களை வெளியிட்டு தங்கள் வலைத்தளங்களை பின் தொடர்வோரை வைத்து வைரலாக்கவும் தயார் என்று தெரிவித்ததாக கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தியுள்ளது.
“பெரும்பாலும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை விளம்பரப்படுத்த இவர்கள் தயாராக இருந்தனர். அதாவது இந்த புலனாய்வின் நோக்கம் என்னவெனில் பிரபலங்கள் தொகை பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளை விளம்பரப்படுத்தத் தயாராக இருக்கின்றனர் என்பதே” என்று கோப்ரா போஸ்ட் தெரிவித்துள்ளது.
அதாவது பணம் பெற்றுக்கொண்டு செய்திகள் வெளியிடுவது என்பதான இந்த விஷயம் தேர்தல் கமிஷன் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காகவும் இப்படிப்பட்ட பிரச்சாரங்களை ஒழுங்குமுறைப் படுத்த தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்பதையும் எங்கள் புலனாய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக எடிட்டர் பாஹல் தெரிவித்தார்,
மேலும், இவ்வாறு பணம் பெற்றுக் கொண்டு கட்சிகளுக்குப் பிரச்சாரமோ, விளம்பரமோ செய்யும் போது அவர்கள் ‘பொறுப்புத் துறப்பு’ ஒன்றை வெளியிட்டு இது விளம்பரம்தான் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும், என்கிறார் பாஹல்.