

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த லலிதா குமாரமங்கலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேனகா கூறும்போது, “மகளிர் ஆணையத் தலைவர் பதவிக்கு லலிதா மிகவும் பொருத்தமானவர். இந்த நியமன முடிவு மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியால் எடுக்கப்பட்டது. புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த மோகன் குமாரமங்கலத்தின் மகளான இவரது சேவை ஆணையத்துக்கு அதிக பலனைத் தரும்” என்றார்.
மகளிர் ஆணைய பொறுப்புகளில் அரசியல்வாதிகளை நியமிப்பதை தாம் ஆதரிக்கவில்லை என மேனகா கூறிய ஓரிரு தினங்களில் லலிதா இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.
லலிதா தற்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். தமிழரான லலிதா, ‘பிரக்ரிதி’ எனும் பெயரில் தொண்டு நிறுவனமும் நடத்தி வருகிறார்.
தேசிய மகளிர் ஆணையத் தலைவர் பதவி கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் காலியாக இருந்தது. இதற்கு முன் மம்தா சர்மா என்பவர் இப்பதவியில் இருந்தார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மகளிர் ஆணையம் வெறும் நோட்டீஸ் மட்டும் வழங்குவதால் பலனில்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. எனவே பாலியல் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான புகார்களில் கைது வாரன்ட் மற்றும் சோதனைகளுக்கு உத்தரவிடும் அதிகாரத்தை மகளிர் ஆணையத்துக்கு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.