Published : 28 Feb 2019 04:41 PM
Last Updated : 28 Feb 2019 04:41 PM

எடியூரப்பா பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸ். பதிலென்ன?- சித்தராமையா காட்டம்

பாலாகோட் தாக்குதலால் பாஜகவுக்கு தேர்தல் ஆதாயம் கிட்டும் என எடியூரப்பா கூறியிருப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். பதில் என்னவென்று வினவியிருக்கிறார் மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா.

முன்னதாக, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த எடியூரப்பா, "ஒவ்வொரு நாளும் பாஜகவுக்கு ஆதரவான சூழல் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. காற்று பாஜகவின் பக்கம் வீசுகிறது. பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தீவிரவாதிகள் பதுங்கிடங்களை அழித்துள்ளது நாட்டில் மோடி ஆதரவு அலையை உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தெரியும். இதனால், மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் 28 தொகுதிகளில் 22-ல் பாஜகவுக்கு வெற்றி கிட்டும்" எனக் கூறியிருந்தார்.

ராணுவ தாக்குதல்களை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவதாக பாஜக மீது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் சூழலில் அதை நிரூபிப்பதுபோல் எடியூரப்பா பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து சித்தாரமையா, "பாஜகவின் ஓட்டுவேட்டைக்கான சதி அதிர்ச்சிகரமாகவும் அருவருக்கத்தக்கதாகவும் இருக்கிறது. குண்டு வீச்சால் ஏற்பட்ட புழுதி அடங்குவதற்குள் இப்படி பாஜக தேர்தல் ஆதாயத்தை கணக்கிட்டுக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஒரு வீரரின் மரணத்தில் எந்த ஒரு தேசபக்தரும் இப்படியொரு குரூர மகிழ்ச்சியை அடையமுடியாது. ஒரு தேச விரோதியால் மட்டுமே இதை செய்ய முடியும். இதற்கு ஆர்.எஸ்.எஸ். சொல்லும் பதில் என்ன?" என வினவியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x